‘இந்த வருசம் நாங்கதான் ஐபிஎல் கப் ஜெயிப்போம்’!.. ரொம்ப கான்பிடன்ட்டா சொன்ன வீரர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை தங்களது அணிதான் பெறும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் புதிதாக இணைந்த வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் முடிந்ததை அடுத்து விராட் கோலியும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் இறங்கியுள்ளார். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கேப்டனாக இருந்து வழி நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை பெங்களூரு அணிதான் கைப்பற்றும் என அந்த அணியின் வீரர் டான் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் நேரலையில் பகிர்ந்துகொண்ட அவர், ‘இந்த ஆண்டு நாங்கள்தான் ஐபிஎல் தொடரை வெல்வோம். ஒரு அணியாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த வீரர்களுடன் விளையாட உள்ளேன். அதேபோல் சொந்தநாட்டு வீரர் மேக்ஸ்வெல் உடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்வது அருமையாக இருக்கும்’ என டான் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த மினி ஐபிஎல் ஏலத்தில் 37 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் கிறிஸ்டியனை ரூ. 4.8 கோடி கொடுத்து பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பிபிஎல் டி20 லீக் தொடரில், கோப்பையை வென்ற Sydney Sixers அணியில் டான் கிறிஸ்டியனும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய பெங்களூரு அணி, Eliminator சுற்றில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்