உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவி.. கண்ணீர் விடும் பெற்றோர்.. வாட்ஸ் அப் மூலம் கதறும் மாணவர்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.  இதற்கு 'ஆபரேசன் கங்கா' என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் 5வது சிறப்பு விமானம் இன்று டெல்லி வந்தடைந்தது. இதன்படி உக்ரைனில் இருந்து இதுவரை 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.  இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள குன்னூரைச் சேர்ந்த மாணவியை மீட்கக் கோரி அவரது பெற்றோர் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சாய் ஷோனு. இவர் உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இந்நிலையில், அங்கு போதிய உணவு, குடிநீர் இல்லாமல் தங்கள் மகள் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய மாணவிகள் சிக்கித் தவித்து வருவதாகவும், அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வரக் கோரியும் சாய் ஷோனுவின் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். கார்கிவ் நகரில் இருந்து ருமேனியா 800 கி.மீ. தூரத்தில் உள்ளது. கார்கிவ் நகரில் இருந்து ருமேனியா செல்வதற்கு போக்குவரத்து வசதி இல்லை. அதனால் கார்கிவ் நகரில் இருந்து, அங்குள்ளவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று தூதரகத்தையும் முதலமைச்சரையும் கேட்டுகொண்டுள்ளதாக திருப்பூர் மாணவர்கள் கண்ணீர் விடுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜீவா நகரை சேர்ந்தவர் அஸ்வந்த். இவரது நண்பர்கள் சசி (சென்னை), சந்த்ருஆனந்த் (காரைக்கால்). இவர்கள் உக்ரைனில் கார்கிவ் நகரில் மருத்துவம் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள பதுங்கு குழியில் இருந்து செல்போனில் பேசி அதை வாட்ஸ்-அப்பில் பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான செயல் திட்டத்தை வெளியிட வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியர்கள் மீட்பு நடவடிக்கைக்காக ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் இருந்து ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இருந்து 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார். இதனிடையே, ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 249 இந்தியர்களுடன் 5-வது சிறப்பு விமானம் இன்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

UKRAINE, NILGIRI, VIRAL VIDEO, MEDICAL STUDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்