'சார், இது 'No Parking'... 'தூக்கு என்னையும் சேத்து தூக்கு, சவால் விட்ட இளைஞர்'... 'இணையத்தில் வைரலான வீடியோ'... உண்மையில் நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாகன ஓட்டியுடன் மோட்டார் சைக்கிளைப் போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சமர்த் போக்குவரத்து காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது விதிகளை மீறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைப் பறிமுதல் செய்யும் வேலையை போலீசார் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது No Parking பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, வாகனத்தை, கொக்கி மூலம் தூக்கி வேனில் நிறுத்தும் பணியில் போலீஸாரும், ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களும் ஈடுபட்டனர். அப்போது வாகனத்துக்குச் சொந்தக் காரரான இளைஞர் ஓடிவந்து மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டார். அவர் என்னுடைய வாகனத்தைப் பறிமுதல் செய்யக்கூடாது என வாக்குவாதம் செய்தார்.

அதற்கு போலீசார் விதிமீறி வாகனத்தை நிறுத்தி இருந்ததால் அதை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்வதாகவும், வாகனத்தை விட்டு கீழே இறங்கும்படியும் அந்த இளைஞரிடம் போக்குவரத்து போலீஸார் எடுத்துக் கூறினர். ஆனால் என்னை மீறி எடுக்க முடியாது என போலீசாரிடம் மீண்டும் அந்த இளைஞர் தகராறு செய்தார்.

அப்போது அந்த காட்சிகளை வீடியோவாகப் படம் பிடித்த சிலர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவத்திற்கு போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) ராகுல் விளக்கமளித்துள்ளார். அதில், ''போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள வாகனங்களை அதுவும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அவற்றைப் பறிமுதல் செய்வது வழக்கம்.

பின்னர் அபராதம் செலுத்திய பிறகு உரிமையாளர்களிடம் வாகனங்களை ஒப்படைப்பது வழக்கம். இதற்காக ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் வாகனங்களை வேனில் தூக்கி நிறுத்துவது, இறக்குவது போன்ற பணிகளைச் செய்து வருகிறோம். அப்படி வாகனத்தைத் தூக்கும் போதுதான் அதற்குரிய இளைஞர் ஓடிவந்து ஏறிவிட்டார்.

ஆனால் சம்பவ இடத்திலிருந்த போலீசார் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அந்த இளைஞரோடு சேர்த்து வாகனத்தை வேனில் இறக்கி வைத்துள்ளார்கள். பின்னர் அந்த வாகன ஓட்டி மன்னிப்பு கேட்டு, விதியை மீறி வாகனத்தை நிறுத்தியதற்காக அபராதம் செலுத்தியுள்ளார்.

இருப்பினும் சம்பவ இடத்திலிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் கட்டுப்பாட்டு அறைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும்'' என போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) ராகுல்  தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்