'கார் சர்வீஸிற்கு போன இடத்தில் நடந்த விபரீதம்'... 'சினிமா ஸ்டண்ட் காட்சிகளை மிஞ்சிய சேஸிங்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காரை சர்வீஸிற்கு கொடுத்து விட்டு, வீட்டிலிருந்த காரின் உரிமையாளர் நடத்திய சேஸிங் சீன், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் எலியாஸ். இவருக்கு சொந்தமான இன்னோவா காரை சர்வீஸிற்கு விட்டிருந்தார். இந்நிலையில் மீனாங்கடி காவல் நிலையத்திலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய காவலர் ஒருவர், கோழிக்கோடு - மைசூரு சாலையில்  உங்களுடைய கார் அதிக வேகத்தில் சென்றிருக்கிறது. எனவே அதற்கு அபராதம் கட்டவேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு எலியாஸ், தனது இன்னோவா காரை சர்வீஸிற்கு விட்டிருப்பதால், அதை ஓட்டியவரிடம் இருந்து அபராதத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என கூறிக்கொண்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

அதன்பிறகு அவர் காரை சர்வீஸிற்கு கொடுத்திருந்த ஷோ ரூமில் இருந்து எலியாஸுக்கு போன் வந்தது. அதில் சர்வீஸ் சென்டரிலிருந்து உங்களது கார் திருடு போயுள்ளதாகக் கூறியுள்ளார்கள். இதைக் கேட்டு அதிர்ந்துபோன எலியாஸ், சர்வீஸ் சென்டருக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது மதியம் 12:40க்கு சர்வீஸ் செண்டரிலிருந்து யாரோ காரை ஓட்டிச்சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது.

 

 

 

அங்கிருந்து சென்ற கார் கிருஷ்ணகிரி பகுதியில் அதிவேகத்தில் சென்றதாக போலீஸாரால் கார் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பித்தபோது, போலீஸார் வானகத்தின் விவரங்களைக் கண்டறிந்து எலியாஸிற்கு அழைத்திருக்கின்றனர். வயநாட்டிலிருந்து கர்நாடகா, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை வழிகள் எலியாஸுக்கு தெரிந்திருந்ததால், போலீசாரிடம் புகார் அளித்துவிட்டு  அவரும் தனது காரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

காரை தேடிக்கொண்டு அம்பலவயலுக்கு அருகே மட்டப்பாரா பாறை பகுதியில் அவர் செல்லும் வழிக்கு எதிர் பக்கத்தில் நெடுஞ்சாலையில் தனது சிகப்புநிற இன்னோவா கார் வேகமாகச் செல்வதைப் பார்த்திருக்கிறார். உடனே காரை எலியாஸ் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்த திருடன், நெடுஞ்சாலையில் செல்லாமல் குறுக்கு வழியில் அங்கிருந்த கடைமுன்பு நின்ற பைக்குக்களை அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.

 

ஆனால் விடாமல் துரத்திச்சென்ற எலியாஸ் 5 கிலோமீட்டருக்குள் ஒரு குறிக்குச்சந்தில் சென்ற திருடனைப் பிடிக்க, அவருடைய ஊழியர் ஒருவர் காரிலிருந்து இறங்கி ஓடியிருக்கிறார். அவருடன் சில உள்ளூர் வாசிகளும் ஓடிச்சென்று காரைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். ஆனால் அவர்களையும் மீறி அந்த திருடன் காரை திருப்பிக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டான். ஆனாலும் சோர்ந்து விடாத எலியாஸ் அங்கிருந்து 15 கிலோமீட்டருக்கு அப்பால் மேப்பாடி பகுதிக்கு அருகில் வடுவான்சல் பகுதியில் மீண்டும் காரை கண்டுபிடித்திருக்கிறார். அப்போது மேப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கார் நுழைந்தவுடனேயே, மீனாங்கடி போலீஸார் அங்கு தகவல் கொடுத்துவிட்டனர்.

இதற்கிடையே கட்டடப் பணி நடந்துகொண்டிருக்கும் ஒரு இடத்தில், இரண்டு கார்களுக்கு நடுவே தனது கார் நிற்பதை எலியாஸ் பார்த்த நிலையில், காரை ஓட்டிவந்த திருடன் தப்பிச் சென்றுவிட்டான். இருந்தாலும் விடாமல் துரத்திய எலியாஸ் அந்த கட்டடத்திற்குப் பின்புறத்திலிருந்த காட்டுப்பகுதியில் தேடி அங்கு ஒளிந்திருந்த திருடனை ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டார். பின்னர் அங்கு வந்த போலீசார் திருடனைக் கைது செய்தனர். இதனிடையே திருடனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த திருடன் பெங்களூருவைச் சேர்ந்த பிலக்கல் நாசிர் என தெரியவந்தது.

ஏற்கெனவே நாசிர்பேரில், 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பெங்களூருவில் பதிவாகி இருக்கிறதாக போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதற்கு முன்பே கோழிக்கோடு பகுதியில், காரில் ஜிபிஎஸ் இருந்தது தெரியாமல் ஒரு காரைத் திருடிச்சென்றிருக்கிறார். ஜிபிஎஸ் உதவியுடன் போலீஸார் மீட்ட சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையே அதிரடியாக நடந்த சேஸிங் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்