தடுப்பூசி பாதுகாப்பானாது: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் சிலருக்கு மட்டுமே மீண்டும் நோய் தொற்று - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் சிலருக்கு மட்டுமே மீண்டும் நோய் தொற்று ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில் தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையிலும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கோவாக்‌ஷின் (Covaxin) மற்றும் கோவிஷீல்டு (Covishield) ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சிலருக்கே மீண்டும் கொரோனா பாசிட்டீவ் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தடுப்பூசிக்கு வீரியம் இல்லை என்று அர்த்தமில்லை என்றும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த நிலையில் ஐசிஎம்ஆர் இயக்குநர் டாக்டர். பல்ராம் பார்கவா (Dr. Balram Bhargava) தடுப்பூசிகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘இந்த தடுப்பூசி நோய் தொற்றில் இருந்து கண்டிப்பாக நம்மை பாதுகாக்கும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி (Immune) இரண்டு வாரங்களுக்கு பின்னரே தெரிய வரும். முதல் அல்லது இரண்டாவது டோஸ் போட்டு, இரண்டு வாரங்களுக்கு பின்னர்தான் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது ஒவ்வொருவரின் உடல்நிலையை பொறுத்து மாறுபடலாம்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இதுவரை 1.1 கோடி பேருக்கு கோவாக்‌ஷின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 9.3 மில்லியன் பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 4,208 (0.04%) பேருக்கு கொரோனா பாசிட்டீவ் ஏற்பட்டுள்ளது. அதேபோல், 1.7 மில்லியன் பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட பின்னர் 695 (0.04%) பேருக்கு கொரோனா பாசிட்டீவ் வந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரை முதல் டோஸ் 100.3 மில்லியன் (சுமார் 10 கோடி) பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் 17,145 (0.02%) பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டோஸை 15 மில்லியன் பேர் செலுத்திக் கொண்டனர். இவர்களில் 5,014 (0.03%) பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு என்பது மிகவும் குறைவான அளவுதான். அதனால் யாரும் கவலைப்பட தேவையில்லை’ என டாக்டர். பல்ராம் பார்கவா அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று பரவமால் தடுக்க, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் சானிடைசர் உபயோகிப்பது போல், மக்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் தடுப்பூசி செலுத்துவதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்