'திருமணத்திற்காக' 850 கி.மீ சைக்கிளில் 'பயணம்' செய்த மணமகன்... கடைசியில் 'காத்திருந்த' அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தன்னுடைய திருமணத்திற்காக சைக்கிளில் 850 கிலோ மீட்டர் பயணம் செய்த மணமகனை போலீசார் தனிமைப்படுத்தி உள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் 20-ம் தேதியான இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. ஆனால் கொரோனா பாதிப்பில்லாத பகுதிகளுக்கு மட்டும் தான் இந்த தளர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலம் மஹராஜ் கஞ்ச் மாவட்டம் பிப்ரா ரசூல்பூரை சேர்ந்தவர் சோனு குமார் சவுகான்(24). இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் உள்ள டைல்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்த ஊரில் ஏப்ரல் 15-ம் தேதி விமரிசையாக திருமணம் நடத்திட பெரியவர்கள் முடிவு செய்தனர்.

இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து போக்குவரத்து சாதனங்களும் முடக்கப்பட்டன. இதையடுத்து சொந்த ஊருக்கு எப்படி செல்வது என சோனு தன்னுடைய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சைக்கிளில் சொந்த ஊருக்கு பயணம் செய்வதென முடிவெடுத்து அதன்படி நண்பர்களுடன் சோனு சைக்கிளில் சொந்த ஊருக்கு பயணம் செய்தார்.

ஏப்ரல் 12-ம் தேதி சோனு உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் 3 நாட்கள் தொடர்ந்து சைக்கிள் மிதித்து சுமார் 850 கிலோ மீட்டர் தாண்டி உத்தர பிரதேச மாநில எல்லைக்கு வந்தனர். அங்கு சோதனைச்சாவடியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்குள்ள கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து மணமகன் சோனு, ''இங்கிருந்து எங்கள் ஊர் 150 கிலோமீட்டர் தூரத்தில் தான் உள்ளது. போலீசாரிடம் எவ்வளவோ கேட்டும் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. அனுமதி அளித்திருந்தால் எங்களது திருமணத்தை அமைதியாக நடத்தி இருப்போம். ஆனால் எங்களை தனிமைப்படுத்தி வைத்து விட்டனர். அதே நேரம் ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம் தான். திருமணத்தை பின்னர் கூட நடத்தி கொள்ளலாம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''எங்கள் மாவட்ட எல்லைக்குள் நுழையும்போது அவர்களை தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தி விட்டோம். இருவார காலத்தில் அவர்களுக்கு டெஸ்ட் ரிசல்ட் வந்துவிடும். கொரோனா ரிசல்ட் நெகட்டிவாக வந்தால் அவர்களை ஊருக்குள் செல்ல அனுமதித்து விடுவோம்,'' என தெரிவித்துள்ளனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்