‘மகள், மகனைக் கொலை செய்துவிட்டு’.. ‘பிசினஸ் பார்ட்னருடன்’ சேர்ந்து.. ‘கணவன், மனைவி’ செய்த அதிர்ச்சி காரியம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்ஷன் என்பவர் தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு மனைவி மற்றும் பிசினஸ் பார்ட்னருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த குல்ஷன் வாசுதேவ் என்பவர் டெல்லி காந்தி நகர் பகுதியில் கார்மென்ட்ஸ் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் தன் மனைவி, மகள், மகன் மற்றும் பிசினஸ் பார்ட்னரான ஒரு பெண் ஆகியோருடன் காசியாபாத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த அபார்ட்மென்ட்டில் திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த காவலாளி சென்று பார்த்தபோது 3 பேர் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ந்துபோன அவர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் போலீஸார் விசாரித்ததில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது குல்ஷன் வாசுதேவ் மற்றும் அவருடைய மனைவி மற்றும் பிசினஸ் பார்ட்னர் எனத் தெரியவந்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது குல்ஷன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து குல்ஷனின் வீட்டை சோதனை செய்த போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. வீட்டின் ஒரு அறையில் குல்ஷனின் மகள் மற்றும் மகன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். போலீஸ் விசாரணையில் நிதி நெருக்கடி காரணமாக குல்ஷன் மகள், மகனைக் கொலை செய்துவிட்டு மனைவி மற்றும் பிசினஸ் பார்ட்னருடன் 8 வது மாடியில் உள்ள தன் அபார்ட்மென்ட் பால்கனியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் சுவற்றில் நாங்கள் அனைவரும் ஒன்றாக தகனம் செய்யப்பட வேண்டும் என இந்தியில் எழுதப்பட்டு, இறுதிச் சடங்கிற்காக 10,000 ரூபாய் பணமும், தற்கொலை கடிதம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்துள்ளது. 

கடிதத்தில் இருந்த தகவலின்படி, குல்ஷனின் உறவினரான ராகேஷ் என்பவர் தொழில் செய்வதற்காக அவரிடமிருந்து 5 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். குல்ஷன் தன்னிடம் இருந்த தொகை மற்றும் நண்பர்கள் சிலரிடமிருந்தும் கடன் பெற்றும் ராகேஷுக்கு உதவியுள்ளார். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்த ராகேஷ் கொடுத்த 9 செக்குகளும் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் குல்ஷன் தன் சொத்துக்களை விற்று நண்பர்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் ராகேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி வருகின்றனர்.

UTTARPRADESH, CRIME, MONEY, MURDER, HUSBAND, WIFE, DAUGHTER, SON, SUICIDE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்