'அந்த பெண் மட்டும் அப்படி சொல்லாமல் இருந்திருந்தால்'... '20 வருஷம் கழித்து நிரபராதி என வந்த தீர்ப்பு'... வாழ்க்கையை தொலைத்து நிற்கும் நபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தவறான பாலியல் குற்றச்சாட்டினால், 20 வருடங்கள் சிறையிலேயே ஒருவர் தனது வாழ்க்கையைத் தொலைத்த சோகம் நடந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு திவாரி என்பவர் மீது அவரது 23வது வயதில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவரது கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வயலில் வேலை செய்து விட்டுத் திரும்பி வந்த போது விஷ்ணு திவாரி அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என சம்பந்தப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் 23 வயதில் ஜெயிலுக்குப் போனவர் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை உட்பட எஸ்.சி/எஸ்டி வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழும் தண்டனை பெற்று ஏககாலத்தில் இந்தத் தண்டனைகளை அனுபவிக்க கோர்ட் உத்தரவிட்டது. மேலும் எஸ்.சி/எஸ்டி வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது.

தற்போது தனது 43வது வயதில் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும் விஷ்ணு திவாரிக்குத் தனது வாழ்க்கையை எதை நோக்கிச் செலுத்துவது எனப் புரியாமல் தவித்து நிற்கிறார். இதுகுறித்து என்.டி.டிவியிடம் பேசிய விஷ்ணு திவாரி, ''20 ஆண்டுகள் சிறையிலிருந்து விட்டேன். சிறையில் கடினமான வேலைகளைச் செய்து எனது மனமும், உடம்பும் உடைந்து விட்டது. எனக்கு குடும்பமும் இல்லை. ஒரே ஒரு சகோதரர் மட்டும் இருக்கிறார்.

எனக்குத் திருமணம் ஆகவில்லை. கையைப் பாருங்கள், ஜெயில் சமையலறையில் வேலை செய்து கையெல்லாம் கொப்புளங்கள். சிறை நிர்வாகம் நான் வேலை செய்ததற்கான கூலியாக 600 ரூபாய் கொடுத்தார்கள், இவ்வளவுதான் என்னிடம் இருக்கிறது, இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது'' எனத் தனது மனக்குமுறலை விஷ்ணு திவாரி வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே ஜனவரி மாதம் இவரை அலஹாபாத் நீதிமன்றம் குற்றத்திலிருந்து விடுவித்த போது, “மருத்துவ ஆதாரத்தில் பலாத்காரம் செய்ததற்கான குறைந்த பட்ச அடையாளம் கூட இல்லை அரசு தரப்பு வாதங்கள், சாட்சிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை இவர் வாயைப்பொத்தி தரையில் வேகமாகத் தள்ளியதாகக் கூறப்பட்டாலும் அந்தப் பெண் மீது காயம் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் மருத்துவ ஆதாரங்களின்படி விந்து இருந்ததற்கான ஆதாரமும் இல்லை. பலாத்காரம் நடக்கவில்லை என்று மருத்துவர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர். அதோடு பெண்ணின் உடல் பாகங்கள் எதிலும் காயமில்லை, பின் எப்படி பலாத்காரம் நடந்திருக்க முடியும்?, என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் 3 சாட்சியங்களின் விசாரணைகளையும் குறுக்கு விசாரணைகளையும் பார்த்ததில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன.

எனவே குற்றம்சாட்டப்பட்டவர் தவறாகக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுகிறார்.  மேலும் நீதிபதி கூறிய போது இவரது ஆயுள் தண்டனையைக் குறைக்க வாய்ப்பிருந்தும் மாநில அரசு குறைக்கவில்லை என்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது'' என தங்களின் ஆதங்கத்தை நீதிபதிகள் வெளிப்படுத்தினர்.

இப்போது தான் நிரபராதி எனத் தீர்ப்பு வந்தாலும் அதைக் கொண்டாட முடியாமல் இனிமேல் வாழ்க்கையில் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து நிற்கிறார், விஷ்ணு திவாரி.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்