பாலியல் வன்கொடுமை.. பற்றியெரிந்த தீயுடன்.. 1 கிலோமீட்டர் 'ஓடிய' பெண்.. உயிருக்கு 'கடும்' போராட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் எனும் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த மார்ச் மாதம் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் தப்பியோடி விட, மற்றொருவர் சிறையில் இருந்து கடந்த 30-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று காலை நீதிமன்றத்துக்கு அந்த பெண் சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றபின் அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த பெண் 112-க்கு கால் செய்து தன்னுடைய நிலையை எடுத்துச்சொல்லி உதவி கேட்டுள்ளார். மேலும் பற்றியெரிந்த தீயுடன் உதவி கேட்டு சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது சுமார் 90% தீக்காயங்களுடன் அந்த பெண் மீட்கப்பட்டார். தொடர்ந்து அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அந்த பெண்ணை சிகிக்சைக்காக விமானத்தில் டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது நீதிபதி முன்னிலையில் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தன்னை 5 பேர் கடத்திச் சென்று தீயிட்டுக் கொளுத்தியதாக கூறியுள்ளார்.

கடந்த வாரம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்து மக்களை தீராத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா,'' நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சட்டம், ஒழுங்கு உத்தர பிரதேசத்தில் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது இளம்பெண் ஒருவர் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளார். முதலில் உங்கள் பொய் பிரச்சாரங்களை விட்டு வெளியே வாருங்கள்,'' என காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

மறுபுறம் முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த பெண்ணுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்கும்படியும், நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டுமே என்று காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டு கொண்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்