ஜாலியன் வாலாபாக்: நூற்றாண்டு நினைவுத் தினம்.. மன்னிப்பு எப்போது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகள் ஆனதையொட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு ஜாலியன் வாலாபாக் படுகொலை. 1919-ம் ஆண்டு ரவுலட் என்ற சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் படி, யாரையும் எந்த விசாரணையும் இன்றி போலீசார் கைது செய்யலாம். இந்தச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான பேர் அப்போது கைது செய்யப்பட்டனர்.

இந்த அடக்குமுறையைக் கண்டித்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட கூட்டம் ஏப்ரல் 13-ந் தேதி நடந்தது. இந்தக் கூடட்டத்தில் தலைவர்கள், ரவுலட் அடக்குமுறை சட்டத்தை கண்டித்துப் பேசி வந்தனர்.

அப்போது, பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான ஜெனரல் டயர், தனது படைபரிவாரங்களுடன் ஜாலியன் வாலாபாக் நோக்கி வந்தடைந்தார். வெறும் மிரட்டல் என்று மக்கள் அமைதியாக இருக்க, போலீசாரின் துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் சீறின. என்ன நடக்கிறது என்று புரியும் முன்னரே அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சடலமாகியிருந்தனர். ஆனால், வெறும் முந்நூற்று சொச்சம் பேர் இறந்ததாக பிரிட்டிஷ் அரசு போலிக் கணக்கு காட்டியது.

சம்பவம் நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின், உத்தம் சிங் என்ற ராணுவ வீரர், இங்கிலாந்து சென்று டயரை சுட்டுக்கொன்று பழி தீர்த்துக்கொண்டார். நூற்றாண்டை தொட்டுள்ள இந்த கொடூரத்தின் நினைவு தினமான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜாலியன் வாலாபாக்கில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் மோடியும், உயிர்த்தியாகம் செய்தவர்களை ட்விட்டரில் நினைவுக் கூர்ந்துள்ளார்.

பிரிட்டன் அரசு இதுவரை இந்தக் கொடூரத்திற்கு மன்னிப்பு கேட்டதே இல்லை. 100 ஆண்டுகள் ஆனதையொட்டி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே ஆழ்ந்த வருத்தங்கள் தெரிவித்தார். பிரிட்டன் நாட்டின் தூதர் டொமினிக் அஸ்க்குத் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது இந்தச் சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு தகவல்துறை மந்திரி பவத் சவுத்ரி, 'ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பாகிஸ்தான், இந்தியா, வங்காள தேசம் ஆகிய நாடுகளிடம் இங்கிலாந்து அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், லாகூர் அருங்காட்சியகத்துக்கு சொந்தமான கோகினூர் வைரத்தை அருங்காட்சியகத்துக்கே இங்கிலாந்து அரசு திருப்பித்தர வேண்டும்' என்று அவர் கூறினார்.

 

JALLIANWALA, BAGH, MASSACRE, RAGULGANDHI, MODI, BRITISH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்