VIDEO: ‘பாதபூஜை’!.. நீங்க பண்ணுனது சாதாரண காரியம் இல்ல.. ஊரே சேர்ந்து தோளில் தூக்கி கொண்டாடிய ‘ஒருவர்’..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விழா எடுத்து பழங்குடியின மக்கள் பிரியாவிடை கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மல்லுகுடா என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திரா என்பவர் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். இந்த அரசுப் பள்ளியில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் இடிந்த கட்டிடங்களுக்கு மத்தியில் மாணவர்கள் படிப்பதைப் பார்த்து வேதனையடைந்த நரேந்திரா, உடனே பள்ளியை சீரமைக்க வேண்டும் என கடிதம் மூலம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மல்லுகுடா கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருவதால், அவர்களது குழந்தைகளுக்கு கல்வியை போதிப்பதில் ஆசிரியர் நரேந்திரா மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளார். மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு வர ஊக்குவிப்பது, அவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்று தருவது மற்றும் சமூதாயத்தில் தாங்களும் முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்குவது போன்ற பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்த அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று 10 ஆண்டுகள் கடந்த நிலையில், நரேந்திராவிற்கு விஜயநகரத்திற்கு பணி மாறுதல் கிடைத்துள்ளது. இதனை அந்த கிராம மக்களிடம் நரேந்திரா தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக தங்களது குழந்தைகளுக்கு கல்வியை போதித்த ஆசிரியரை விழா எடுத்து வழி அனுப்ப அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி தங்கள் பழங்குடியின முறைப்படி ஆசிரியர் நரேந்திராவை தோளில் சுமந்து வீதியெங்கும் ஆடல், பாடலுடன் உற்சாகமாக வழி அனுப்பியுள்ளனர். மேலும், தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அறிவை கொடுத்த ஆசிரியர் கடவுளுக்கு நிகர் எனக் கூறி, நரேந்திராவுக்கு பாதபூஜை செய்து அவரை உருக வைத்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, கல்வியை போதிப்பவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்