'ஒரு வருஷத்துல சுங்க சாவடிகளே இருக்காது'... 'ஆனா பணம் வசூலிக்க மற்றோரு முறை'... நிதின் கட்கரி தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் ஒரு வருடத்தில் நீக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2-வது கட்டக் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., குன்வார் டேனிஷ் அலி, கட்முக்தேஸ்வர் அருகே சாலையில் நகராட்சி எல்லையில் ஒரு சுங்க சாவடி அமைத்திருப்பது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ''முந்தைய அரசும், நகரத்திற்கு அருகில் சுங்கச்சாவடிகள் அமைத்தன. இது சட்ட விரோதமானது. இதுபோன்ற சுங்கச்சாவடிகளை அகற்ற முடிவு செய்துள்ளோம். நான் இந்த அவையில் ஒரு உறுதி மொழியை வைக்கிறேன். அடுத்த ஓராண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு, முற்றிலும் ஜிபிஎஸ் முறையிலேயே கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும்'' என்றார்.

இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்துத் தெரிவித்த அமைச்சர், ''சாலையின் நுழைவு பகுதி மற்றும் வெளியேறும் இடங்களில் கேமராக்கள் இருக்கும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட சாலையில் நுழைந்ததும், வெளியேறும் இடத்திலும், இரு இடங்களிலும் உங்கள் படம் கேமராவுடன் பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில், உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பிறகு யாரும் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்த வேண்டியதில்லை. இப்போது புதிய வாகனங்களில் GPS அமைப்பு வருகிறது. பழைய வாகனங்களில் GPS அமைப்பை இலவசமாக நிறுவுவோம்'' என்றார்.

இதற்கிடையே பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்ட பின்னர், மோசடிகள் முற்றிலும் ஒழிந்து இருப்பதாகத் தெரிவித்தார். நாட்டில் தற்போது 93 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் முறையைப் பின்பற்றிய சுங்கச் சாவடிகளில் கட்டணத்தைச் செலுத்துகின்றன. இப்போது வரை 7 சதவீதம் பேர் பாஸ்டேக் எடுக்காமல் இரண்டு மடங்குக் கட்டணத்தைச் செலுத்துகிறார்கள், எனவும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்