'நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்கணும்'... 'கொந்தளித்த கோவா அமைச்சர்'... மன்னிப்பா? அமைச்சர் கொடுத்த அதிரடி பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோவா மக்களுக்கு இது போன்ற அமைச்சர் கிடைத்ததற்காக வருத்தப்படுகிறேன் என பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில், நிதியமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதவியேற்றார். பி.டி.ஆர் அமைச்சராக பதவியேற்றதிலிருந்து பல அதிரடி கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், பாஜக தலைவர் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோருடன் நடந்த வார்த்தை மோதல்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது கோவா அமைச்சருக்கும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்குமிடையேயான மோதல் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தான் இரு மாநில அமைச்சர்களுக்குமிடையேயான உரசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 28ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, பொருளாதாரம் போன்றவற்றின் அடிப்படையிலேயே வாக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். மேலும் இதன் அடிப்படையிலேயே கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கான நேரத்தையும் நிர்ணயிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச்சுக்கு, மிகச்சிறிய மாநிலமான கோவா சார்பில் கலந்து கொண்ட அம்மாநில அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ தனது எதிர்ப்பை தெரிவித்தார். பெரிய அண்ணன் மனப்பான்மையில் பேசக்கூடாது என்ற வகையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார் கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ. இந்த விவகாரம் இருவருக்குமிடையேயான பிரச்சினைக்கு வித்திட்டுள்ளது.

தமிழக அரசினுடைய பிரதிநிதியின் நடத்தை மிகவும் ஆட்சேபகரமானது.  ஒரு சிறிய மாநிலமாக இருப்பதால் கோவாவின் குரலைப் பறிக்க முயற்சி செய்யப்பட்டது. இது ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது, இதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டார். இந்நிலையில் கோவா அமைச்சரின் கருத்துக்கு பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அதிரடி பதிலைக் கொடுத்துள்ளார்.

அதில், ''8 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் பல்வேறு துறைகளைக் கவனித்து வருகிறேன். 3 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்பவன். தேவையில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கூறி என் நேரத்தை வீணடிப்பதில்லை. ஆனால் கோவா மக்களை நான் அவமானப்படுத்திவிட்டதாக அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்க விரும்புகிறேன்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற முறையே தவறு. மாநில உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதன் அடிப்படையிலேயே அக்கூட்டத்தில் பேசினேன். நான் கோவா மக்களை அவமானப்படுத்தும் வகையில் எதுவும் பேசவில்லை என்பதால் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் கோவா மக்களுக்காகவும், அவர்களுக்கும் ஆதரவாகத்தான் பேசினேன். அதற்காக எனக்கு நன்றி தெரிவிக்க தேவையில்லை. ஆனால் உங்களுக்கு இது போன்ற அமைச்சர் கிடைத்ததற்காக வருத்தப்படுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்