'மலைஉச்சிக்கு இழுத்துச் சென்ற'... 'டிக்டாக் வீடியோ மோகம்’... ‘கல்லூரி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருப்பதி அருகே டிக்டாக் வீடியோ எடுக்கும் மோகத்தில், சேஷாசலம் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்ற இளைஞர் ஒருவரின் செயல், விபரீதத்தில் முடிந்துள்ளது. 

திருப்பதி அடுத்த ரங்கம் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மைக்ரோபயாலஜி படித்து வருபவர் 21 வயதான முரளி கிருஷ்ணா. டிக் டாக் வீடியோ எடுக்கும் ஆசையில் யாரிடமும் சொல்லாமல், தனியாக சேஷாசலம் அடர்ந்த வனப் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மாணவர் முரளி சென்றார். பொதுமக்கள் செல்ல தடைச் செய்யப்பட்ட அந்த வனப்பகுதிக்குள், ஸ்ரீவாரி மேட்டு பகுதியில் உள்ள மலை மீது ஏறி, தேசியக் கொடியை நட்டார் மாணவர் முரளி. பின்னர் தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து, அங்குள்ள இயற்கை காட்சிகளை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

மாலை நேரம் கடந்து இருள் சூழத் தொடங்கிய நிலையில், அடர்ந்த வனப் பகுதியில் இருட்டில் எங்கு இருக்கிறோம் என்பது தெரியாமல் விழித்த அவர், அங்குமிங்கும் பயத்துடன் அலைந்து திரிந்துள்ளார். இந்நிலையில், தான் இருந்த இடத்தை கூகுள் லொகேஷன் மூலம் அவரது நண்பர் ஒருவருக்கு ஷேர் செய்துள்ளார். அதன்பிறகு அவரது செல்போன் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகவே பதறிப்போயுள்ளார். இதற்கிடையில் மாணவரை காணாததால், கல்லூரி நிர்வாகம் மற்றும் அவரது நண்பர்கள் அளித்த புகாரின் பேரில், முரளி இருந்த பகுதிக்கு வந்த சந்திரகிரி போலீசார், விடிய விடியத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இரவு முழுவதும் வனப் பகுதியிலேயே தன்னந்தனியாக இருந்ததால், மன அழுத்தத்திற்கு ஆளான நிலையில் முரளி பத்திரமாக மீட்கப்பட்டார். கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் கண்டுபிடித்த மாணவரை, திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். பின்னர், அவரது உறவினர் வீட்டுக்கு ஓய்வு எடுக்க அனுப்பி வைக்கப்பட்டார். மாணவர் காட்டுக்குள் இருந்த நேரத்தில், அதிர்ஷ்டவசமாக எந்தவித ஆபத்தான விலங்குகளும் கடக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இல்லையென்றால் விளையாட்டு வினையாகி ஆபத்தில் முடிந்திருக்கும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

TIRUPATHI, YOUTH, TIKTOK, NATIONALFLAG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்