அவங்களும் எங்க அம்மா தானே...! 'ஒரு மகனா இது எங்க கடமை...' இந்து பாட்டியின் உடலை சுமந்து சென்ற இஸ்லாம் இளைஞர்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்த 69 வயது இந்து மதத்தைச் சேர்ந்த மூதாட்டிக்கு இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் இந்தூர் பகுதி மக்களை மனம் நெகிழ செய்துள்ளது.

இந்தூரில் 69 வயதான பாட்டி உடல்நிலை கோளாறால் சிகிச்சை எடுத்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த சூழலில் அவரது இரு மகன்கள் வந்து மூதாட்டியின் உடலை வாங்க தாமதம் ஆகியுள்ளது.

பல மணி நேரங்கள் கழித்து வந்த மகன்களிடம் மருத்துவமனை நிர்வாகம் பாட்டியின் சடலத்தை ஒப்படைத்துள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் தங்களது அம்மாவின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல எந்த வாகனமும் கிடைக்காத சூழலில் தவித்துள்ளனர்.

அப்போது அவர்களது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சில முஸ்லீம் இளைஞர்கள் தாமாக முன்வந்து சடலத்தை எடுத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளை செய்தனர். மேலும் முகத்தில் மாஸ்க் அணிந்து பாட்டியின் உடலை சுமார் 2.5 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் சுடுகாட்டுக்கு சுமந்து சென்று அடக்கம் செய்தனர். அவர்கள் உடலை சுமந்து சென்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அறிந்த மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், ''எந்த வேறுபாடும் பார்க்காமல் முஸ்லீம்  இளைஞர்கள் செய்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது. இந்த செயலானது சமூகத்தில் உண்மையான அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்புகிறது'' என்று ட்விட்டரில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக இளைஞர்கள் குழு "இந்த பாட்டியை எங்களுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே தெரியும் எனவும், இவரும் எங்களுக்கு அம்மா மாதிரிதான் எனவும் கூறியதோடு, அவரை முறையாக அடக்கம் செய்வது ஒரு மகனாக எங்களது கடமையும் ஆகும் என நாங்கள் உணர்ந்தோம்'' என்று கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்