'கவுன் பனேகா குரோர்பதியில் அடித்த 5 கோடி'... 'கையில் அவ்வளவு பணம் இருந்தும் துரத்திய துயரம்'... நெஞ்சை கலங்க வைக்கும் உருக்கமான பதிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மனிதன் வாழ நிச்சயம் பணம் தேவை. அது மனித வாழ்க்கையில் முக்கிய பங்கை ஆற்றுகிறது. ஆனால் அந்த பணம் இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து விடலாம் என நினைத்தால் அது பெரிய முட்டாள்தனமான முடிவு என்பதை உணர்த்துவது போல அமைந்துள்ளது இந்த சம்பவம்.

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்றாகும். அதன் ஐந்தாவது சீசனில், பீகாரைச் சேர்ந்த சுஷில் குமார் என்ற நபர் ரூ.5 கோடியைப் பரிசுத் தொகையாக வென்றார். இது இந்திய அளவில் பேசுபொருளானது. பலரும் சுனில் குமாரை வாழ்த்தியதோடு அவரை பார்த்துப் பிரமித்துப் போனார்கள். ஆனால் அந்த மிகப்பெரிய தொகையை வென்ற பிறகு தற்போது தனது வாழ்க்கையின் மிக மோசமான கட்டத்தை அடைந்து அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவில், ''கவுன் பனேகா குரோர்பதியின் வெற்றி அவரை உடனடி புகழ் பெற வைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வெற்றியை அவரால் கையாள முடியாமல் போனது. அவர் வென்ற பணத்தால், சில புதிய தொழிலைத் தொடங்க முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சி அவருக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது. பின்பு டெல்லி, மும்பை எனச் சென்று தொழில் தொடங்க முயன்றும் அதுவும் பலன் கொடுக்கவில்லை. இதனால் அவருக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவிக்குள்ளும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டது.

2015 - 2016ம் ஆண்டு என்பது எனது வாழ்க்கையில் மிகவும் சோதனை காலம் எனக் குறிப்பிட்டுள்ள சுனில், அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானதால், பீகாரில் தனது படிப்பைத் தொடர முடியாமல் போனதாகக் குறிப்பிட்டுள்ளார். பீகாரில் ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகக் கூறியுள்ளார். வேலையில்லாத நிலையில் அவர் ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்துள்ளார். சரி நம்மால் தொழில் தான் செய்ய முடியவில்லை, பணத்தைத் தானமாகக் கொடுக்கலாம் என முடிவு செய்து பணத்தை நன்கொடையாக வழங்கத் தொடங்கினார்.

ஆனால் அந்த பணமும் சில தவறான மக்களிடம் போய்ச் சேர்ந்தது. இதனால் நிம்மதியைத் தொலைத்த சுனில், பீகாரிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். டெல்லியிலிருந்த காலத்தில், அவர் சிகரெட் மற்றும் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். இதன் தாக்கமாக  மனைவியுடனான அவரது உறவு மோசமடைந்தது, ஒரு கட்டத்தில் அவர் விவாகரத்து கூட கேட்டார். பின்னர் மும்பைக்குச் சென்று படங்களில் நடிக்கலாம் என முயற்சி செய்து அதுவும் தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் சிகரெட் புகைக்கு அடிமையானார். அப்போது தான் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் மனதில் நிம்மதி இல்லையென்றால் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்பதை சுனில் உணர்ந்து கொண்டு, மீண்டும் தனது கிராமத்திற்கே திரும்பி வந்துள்ளார்.

தற்போது பீகாரில் உள்ள தனது கிராமத்தில் ஆசிரியராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் பணியாற்றி வரும் சுனில், இப்போது தான் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதாகத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கையில் பணம் இல்லாத ஒருவனுக்கு ஐயோ நம்மிடம் பணம் இல்லையே என்ற ஏக்கம். அதே பணம் கையில் வரும் போது மனதில் நிம்மதி இல்லையே என்ற ஏக்கம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், பணம் என்றைக்குமே மனதிற்கு நிம்மதியைக் கொடுக்காது என்பது தான்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்