'அப்பா குடிக்கவோ, தம்மோ அடிக்கமாட்டாங்க'... 'ஆனா, 6 மாசம் தான் உயிரோடு இருப்பாருன்னு டாக்டர் சொன்னாரு'... 'அடுத்த நொடி மகன் எடுத்த ரிஸ்க்'... இந்த பையனுக்கு ஒரு சலுயூட் போடலாம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது அப்பாவுக்காக மகன் செய்த தியாகம் நெட்டிசன்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தந்தை, மகன் உறவு என்பது சற்று வித்தியாசமானது. சில குடும்பங்களில் அப்பா, மகன் இருவரும் நண்பர்களாகப் பழகிக் கொள்வார்கள்.  அதே நேரத்தில் சில குடும்பங்களை எடுத்துக் கொண்டால் அப்பா, மகன் என இருவரும் மருந்துக்குக் கூட பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆனால்  அப்பா மீது மகனுக்கும், மகன் மீது அப்பாக்கும் இருக்கும் அன்பு என்பது நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று தான்.

அந்த வகையில் தனது அப்பாக்காக மகன் எடுத்த ரிஸ்க் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. இது தொடர்பாக 'Humans of Bombay' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ''அப்பாவுக்குக் கல்லீரல் செயலிழப்பு இருப்பது கண்டறியப்பட்டபோது அந்த இளைஞர் அதிர்ந்து போனார்.

அப்பா ஒரு நாளும் புகை பிடித்தது இல்லை, குடித்தது கூட கிடையாது. அப்படி இருக்க இது எப்படி சாத்தியம் எனக் குழம்பிப் போனார். உடனே மருத்துவரை அணுகிய நிலையில், அவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு நன்கொடையாளர்கள் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் 6 மாதங்கள் மட்டுமே அப்படி உயிருடன் இருப்பார் என டாக்டர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்.

அதேநேரத்தில் அந்த இளைஞரின் அப்பாக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. ஆனால் தனது அப்பாவைக் காப்பாற்றும் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் தனது கல்லீரலை தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் அந்த இளைஞரின் கல்லீரல் அவரது தந்தையோடு பொருந்திப் போனது.

ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அந்த இளைஞருக்குக் கொழுப்பு கல்லீரல் இருந்தது. இதனால் அவர் தனது உடல் எடையைக் குறைத்து, முறையான உடற்பயிற்சி, மற்றும் உணவுக் கட்டுப்பாடு இருந்தால் தான் கல்லீரலை தானம் செய்யத் தகுதி உடையவர் ஆவார். இதையடுத்து கடுமையாக உடற்பயிற்சி செய்தும், தனது உடல் எடையைக் குறைத்தும் கல்லீரலைத் தனது அப்பாவிற்கு தானம் செய்யும் நிலைக்கு அந்த இளைஞர் வந்துள்ளார்.

இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தில் உள்ள பலருக்கும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆனால் அந்த இளைஞரின் தந்தை, நான் படுக்கையிலிருந்து எழும்பி வந்து உன்னை லுடோவில் வெற்றி பெறுவேன் என நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை முடிந்து அந்த இளைஞர் கண்விழித்த நிலையில், மருத்துவர் அவரை பார்த்து, நீ உன் அப்பாவைக் காப்பாற்றி விட்டாய் எனக் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டதும் அந்த இளைஞர் சந்தோசம் தாங்காமல் கதறி அழுதுள்ளார். ஒரு மகனாக எனக்கு வேறு என்ன சந்தோசம் இருக்க முடியும். உங்களுக்கு மகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், பலரும் நெகிழ்ச்சியுடன் அந்த இளைஞருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்