”அஜ்மல் கசாப்பை விட மோசமானவர்...” மருத்துவமனை படுக்கைகள் விற்கப்பட்ட சர்ச்சை... பாஜக - சித்தார்த் இடையே மீண்டும் மல்லுக்கட்டு... ட்ரோல் செய்து டிரண்டாக்கும் நெட்டிசன்கள்... - என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் கொரோனா தொற்று சுனாமி போல் பரவி வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் 80 %  படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 4,065 படுக்கைகள் பதுக்கப்பட்டிருப்பதாக தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.

கொரோனா சிகிச்சை பெற சாமானிய மக்கள் தவித்து வரும் நிலையில் பணம் படைத்தவர்கள், பதுக்கப்பட்டுள்ள இப்படுக்கைகளை அதிக விலை கொடுத்து பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்விவகாரம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவறிழைத்த மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டார்.

இந்நிலையில், பெங்களூர் மருத்துவமனைகளில் படுக்கைகள் இருந்தாலும், இல்லை என்றே கூறுகிறார்கள். படுக்கைகளை, மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு  விலைக்கு விற்கிறார்கள். பல மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளது, ஆனால் வேண்டுமென்றே தர மறுக்கிறார்கள் என்று தேஜஸ்வி குற்றம் சாட்டினார். அவர், ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கே படுக்கைகள் விற்கப்பட்டிருப்பதாக கூறி, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது.

 

மேலும் தேஜஸ்வி சூர்யா பேசிய ஒரு வீடியோ வைரலான நிலையில், அவர் பிரச்சனையை மதரீதியாக அணுகிறார என காங்கிரசார் குற்றம் சாட்டினர். நடிகர் சித்தார்த்தும் தனது ட்வீட் மூலம் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவை "பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை விட மோசமானவர்" என்று ட்வீட் செய்துள்ளார்.

அஜ்மல் கசாப் லஷ்கர்-இ-தைபா என்ற பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். இவர் 2008-ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் பலரைக் கொன்ற பயங்கரவாதிகளில் இவரும் ஒருவர்.

தற்போது தேஜஸ்வி சூர்யாவின் ஆதரவாளர்கள் சித்தார்த்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு மக்கள் பிரதிநிதியை ஒரு பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சித்தார்த்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் குவிகின்றன.

தொடர்ச்சியாக பாஜக-வை விமர்சித்து வரும் நடிகர் சித்தார்த் பலதரப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் உள்ள படுக்கைகளை பணம் கொடுத்து பதுக்கியதாக தொடுத்த வழக்கில் மூன்று பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்