'பாய்ந்த தேச விரோத வழக்கு'... 'நான் சொன்னதுல என்ன தப்பு'... 'ஆயிஷா சுல்தானா அதிரடி'... குவியும் ஆதரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய அரசுக்கு எதிராகப் பேசிய லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும், திரைப்பட இயக்குநருமான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

லட்சத்தீவைச் சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. மாடலான இவர், சில படங்களில் நடித்துள்ளார். மேலும் படங்களையும் இயக்கியுள்ளார். மலையாளத் திரைத்துறையின் பல இயக்குநர்களுடன் இணைந்து இவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார்.

அப்போது லட்சத்தீவு பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு மத்திய அரசு ‘உயிரியல் ஆயுதங்களை’ (பயோ வெப்பன்) பயன்படுத்தியதாக சுல்தானா குற்றம் சாட்டினார். விவாத நிகழ்ச்சியில் பேசும்போது, "முதலில் லட்சத்தீவில் யாருமே கொரோனவாவால்  பாதிக்கப்படவில்லை. ஆனால் இப்போது தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இங்கு பயோ வெப்பனை மத்திய அரசு பயன் படுத்தியுள்ளது. மத்திய அரசுதான் இதைச் செய்துள்ளது என்று நான் தெளிவாகக் குறிப்பிடுகிறேன்" என்றார்.

இந்நிலையில் தனது கருத்துகள் நியாயமானவை என்றும், அந்த கருத்துகள் சரியானவைதான் என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் ஆயிஷா குறிப்பிட்டிருந்தார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் லட்சத்தீவில் கொரோனா வைரஸ் பரவியது குறித்து சுல்தானா தவறான செய்திகளைப் பரப்பியதாக பாஜகவின் லட்சத்தீவு பிரிவு தலைவர் அப்துல் காதர், காவரட்டி பகுதி போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சுல்தானா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே தேசத்துரோக பிரிவின் கீழ் ஆயிஷா மீது வழக்குப் பதிவு செய்துள்ளதற்குத் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில் ஆயிஷா சுல்தானாக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்