‘ரகசிய கடிதம்’!.. ‘ஹாட்லைன் தொலைபேசி வழியே தகவல்’.. விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுவிப்பதற்காக இந்தியா எடுத்த திரை மறைவு நடவடிக்கைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானை ஒட்டிய பாலகோட் என்ற பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உருவானது.

இதனை அடுத்து இரு நாட்டு விமானப்படையினரும் துரத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பயணித்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தது. அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவம் ரத்த காயங்களுடன் அவரை மீட்டு சென்ற வீடியோக்கள் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ வெளியான உடனே, மத்திய அரசு அபிநந்தனை விடுவிப்பதற்கான அழுத்தங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்தது.

இந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடி உளவுத்துறை அமைப்பான RAW-ன் (Research and Analysis Wing) தலைவர் அனில் தஸ்மனாவை தொடர்பு கொண்டு, ‘அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுவிக்க வேண்டும், அவருக்கு எந்த ஒரு காயமும் ஏற்படக்கூடாது. மீறினால் இந்தியா எதற்கும் அஞ்சாது, என்ன செய்யவும் தயங்காது. இந்தியாவின் ஆயுதங்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக அல்ல’ என பாகிஸ்தானுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியுடன் தெரிவிக்குமாறு கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. தனது நிலைப்பாட்டின் உறுதியை வெளிப்படுத்தும் விதமாக ராஜஸ்தான் எல்லையில் பிரித்வி ஏவுகணைகளை இந்தியா தயார் நிலையில் வைத்திருந்தது.

இதனை அடுத்து RAW-ன் தலைவர் அனில் தஸ்மனா ISI தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அசிம் முனீர் அகமது ஷாவை (Lt Gen Shah) ரகசிய ஹாட்லைன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த தகவல்களை தெரியப்படுத்தியிருக்கிறார். இதன் வெளிப்பாடாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அபிநந்தன் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவார் என்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் 2019 பிப்ரவரி 28ம் தேதி அறிவித்தார்.

அதற்கு முன்னதாகவே ரகசியமாக அபிநந்தனின் விடுவிப்பு குறித்த கடிதத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் 1ம் தேதி விங் கமாண்டர் அபிநந்தனை வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பி வைத்தது.

News Credits: Hindustan Times

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்