சட்டமன்ற வளாகத்துக்குள் ‘ரகசிய’ சுரங்கப்பாதை.. என்னது ‘பாதை’ அங்க வரைக்கும் போகுதா..! ஆச்சரியத்தில் உறைந்த அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சட்டமன்றத்துக்குள் ரகசிய சுரங்கப்பாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ரகசிய சுரங்கப்பாதை டெல்லி சட்டமன்ற வளாகத்துக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் வழியாக டெல்லி செங்கோட்டை வரை செல்ல முடியும் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பேசிய டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், ‘1993-ம் ஆண்டு நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது சட்டமன்ற வளாகத்துக்குள் ஒரு ரகசிய சுரங்கம் இருப்பதாக பேச்சு அடிபட்டது. அந்த சுரங்கம் வழியாக செங்கோட்டை வரை செல்ல முடியும் என சொல்வார்கள். உடனே அதுகுறித்து தேடி பார்த்தேன், ஆனால் என்னால் அப்போது அதை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது இந்த சுரங்கத்தில் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்கள் தங்களது தலைநகரை கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றினர். தற்போது இருக்கும் டெல்லி சட்டமன்றம், 1912-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றமாக இருந்தது. 1926-ம் ஆண்டுக்கு பிறகு சுதந்திர போராட்ட வீரர்களை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் அழைத்து வருவதற்காக இந்த சுரங்கத்தை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இங்கே ஒரு ரகசிய தூக்குப்போடும் அறை இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதனை நாங்கள் பார்த்தது கிடையாது. தற்போதைக்கு இந்த சுரங்கத்தை தோண்டும் எண்ணம் இல்லை. அதற்கு காரணம், இந்த சுரங்கத்தின் பெரும்பாலான பகுதிகள் மெட்ரோ ரயில் வேலைகளினாலும், கழிவுநீர் குழாய்களாலும் சேதமடைந்துள்ளது’ என சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு சுதந்திர தினம் முதல் மக்களின் பார்வைக்காக இந்த சுரங்கத்தை திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சுரங்கம் டெல்லி சட்டமன்ற வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்