‘இத தவிர வேற வழி தெரியல’.. படுத்த படுக்கையான அப்பா.. நொடியில் ‘தலைகீழாக’ மாறிய வாழ்க்கை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேசிய குத்துச்சண்டை சாம்பியன் கார் பார்க்கிங்கில் வேலை பார்த்து வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘இத தவிர வேற வழி தெரியல’.. படுத்த படுக்கையான அப்பா.. நொடியில் ‘தலைகீழாக’ மாறிய வாழ்க்கை..!

சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்து. சிறுவயது முதலே குத்துச்சண்டை மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், பள்ளியில் படிக்கும் போது பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அரசு மகளிர் பள்ளியில் படித்த அவர், உடற்கல்வி ஆசிரியர் பரம்ஜித் சிங் என்பவரால் முதல் முறையாக கடந்த 2015-ம் ஆண்டு பள்ளி அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார். அதில் வெற்றி பெற்ற அவர், அதே வருடம் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

School Nationals boxing medalist works as parking attendant

ரித்துவின் அசாத்திய திறமையை பார்த்த பரம்ஜித் சிங், அவரை தெலங்கானாவில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு அனுப்பி வைத்தார். 63 கிலோ எடைப்பிரிவில் கலந்துக்கொண்ட ரித்து வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். இவரின் குத்துச்சண்டை எதிர்காலம் மேலும் வளர்ந்து நாட்டுக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டிலேயே அவரின் குத்துச்சண்டை கனவு முடிவுக்கு வந்தது.

ரித்து மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் 3 சகோதரர்கள் மொஹாலியில் கூலித்தொழிலாளிகளாக உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு திடீரென ரித்தூவின் தந்தை உடல்நிலை பாதிப்படைந்தார். இதனால் தனது படிப்புக்கும், குத்துச்சண்டை ஆசைக்கும் ரித்து முற்றுப்புள்ளி வைத்தார். இதனை அடுத்து வீட்டின் அருகில் உள்ள கார் பார்க்கிங்கில் டோக்கன் வழங்குபவராக வேலை பார்க்கத் தொடங்கினார். தற்போது 23 வயதாகும் ரித்து நாளொன்றுக்கு ரூ.350 என்ற ஊதியத்திற்காக அங்கு பணிபுரிந்து வருகிறார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘எனது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதில் இருந்து குடும்ப வறுமை அதிகரித்தது. அதனால் நானும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். ரொம்ப கடினமாக தான் இருந்தது. ஆனால் இதை தவிர எனக்கும் வேறு வழி தெரியவில்லை. நான் குத்துச்சண்டை போட்டியில் சிறப்பாக விளையாடியது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

2017-ல் பள்ளிப்படிப்பை நிறுத்தியதில் இருந்து எனது விளையாட்டு ஆசைகளும் முடிந்துவிட்டது. எனக்கு சரியான பயிற்சியாளரும், பயிற்சியும் இல்லாத காரணத்தினால் தேசிய குத்துச்சண்டை போட்டிகள், இந்திய குத்துச்சண்டை சமேளத்திற்காக எந்த போட்டிகளிலும் பங்கேற்க முடியவில்லை’ என தனது ஆதங்கத்தை ரித்து வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ரித்து, ‘நான் இந்திய ராணுவம் மற்றும் பிகார் மாநில காவல்துறை தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளேன். அதற்கான தேர்வுகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னர் காவல்துறை தேர்வு ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்துவிட்டேன்’ எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் தன்னை போன்று ஏழ்மையில் இருக்கும் திறமையானவர்களுக்கு இலவசமாக பயிற்சிகளை தர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு அரசுப்பணி கொடுக்க வேண்டும் என்றும் ரித்து கோரிக்கை வைத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்