'குழந்தையுடன் ரயிலேறிய கடத்தல்காரன்!'.. '260 கி.மீ தொலைவுக்கு.. இடையில் எங்கயும் நிறுத்தாதீங்க!' .. 'திரைப்பட பாணியில்' குழந்தையை மீட்ட ஆர்பிஎஃப் அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப் பிரதேசத்தில் புந்தேல்கண்ட் பகுதி ஆஸாத்புராவைச் சேர்ந்தவர் ஆஷா ரெய்க்வாரின் கணவர் அர்வித் குமார் சரோஜ், எனும் ஆர்பிஎஃப் காவலர்.

இவரது வீடு லலித்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள நிலையில், இவர்களது 3 வயது குழந்தை காவ்யா நேற்று முன்தினம் காணாமல் போனதை அடுத்து ஆர்பிஎஃப் படையினரிடம் மாலை 6.30 மணிக்கு அர்வித் புகார் அளித்தார். சிசிடிவி கேமரா பதிவுகளை தேடியபோது,  ரப்திசாகர் சிறப்பு ரயிலில் ஒரு இளைஞர் குழந்தையுடன் ஏறுவது தெரிந்தது. உடனே போபால் வழியாக சாகர் செல்லும் அந்த ரயிலின், ஓட்டுநருக்குக் கட்டுப்பாட்டு அறை மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடத்தல்காரன் தப்பிவிட வாய்ப்பிருக்கும் என்பதால், மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபால் வரை எந்த நிலையத்திலும் ரயிலை நிறுத்தாமல் ஓட்டும்படியான உத்தரவின் படி ஓட்டுநர் இயக்கினார். இதனிடையே போபால் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் படையினர் ரப்தி சாகர் ரயிலைச் சுற்றி வளைக்க தயாராக காத்திருந்தனர். சுமார் 260 கி.மீ. தொலைவுக்கு நிற்காமல் போபால் வந்தடைந்த ரயிலில் இருந்து இறங்கும்போதே, கடத்தல் காரன் பிடிபட, குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, அங்கு வந்திருந்த குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்திய இளைஞரைக் கைது செய்து ஆர்பிஎஃப் படையினர், விசாரித்து வருகின்றனர்.

இந்த செயலுக்காக லலித்பூர் ஆர்பிஎஃப் காவல் நிலைய அதிகாரிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் பாலிவுட்டில் வெளியான ‘தி பர்னிங் ட்ரெய்ன்’ என்னும் பெயரில் ஒரு இந்தித் திரைப்படத்தில் ரயிலின் சில பெட்டிகள் வழியில் தீப்பிடித்து எரியும்போது பயணிகளைக் காப்பதற்காக படத்தின் 5க்கும் மேற்பட்ட நாயகர்கள் ரயிலை நிறுத்தாமல் சமயோஜிதமாக தீயை அணைப்பார்கள். அந்த காட்சியைப் போல், ஆர்பிஎஃப் படையினர் 260 கி.மீ. தொலைவிற்கு ரப்தி சாகர் ரயிலை நிறுத்தாமல் ஓட வைத்து குழந்தையைக் காத்துள்ளது பாராட்டப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்