'ஆப்பரேஷன் பண்ணிடலாம்...' 'பணத்தை ரெடி பண்ணிட்டீங்க இல்ல...' 'நாலு வருசமா கூவி கூவி காய்கறி வித்து சம்பாதிச்ச காசு...' - நொறுங்கிப்போன முதியவர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அறுவை சிகிச்சைக்காக சிறுகச்சிறுக சேமித்த பணத்தை ஒரே இரவில் எலி வந்து கடித்து குதறிவிட்டு சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மகபூப்பாபாத் மாவட்டம், இந்திரா நகரில் வசித்து வருபவர் 62 வயதான ரெட்டியா. காய்கறி வியாபாரியான இவருக்கு, நான்கு வருடங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது தான் ரெட்டியாவிற்கு வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு, இந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே அகற்ற முடியும் எனவும், அறுவை சிகிச்சைக்கு சுமார் நான்கு லட்ச ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் காய்கறி விற்கும் ரெட்டியாவிற்கு இந்த செய்தி இடியாக விழுந்தது. இருப்பினும் மனம் தளராமல் இரவுபகல் பார்க்காது உழைத்து  சிறுகச் சிறுக இரண்டு லட்ச ரூபாய் தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.

மீதி இரண்டு லட்ச ரூபாய்க்காக தனது வீட்டினை அடகு வைத்து கடன் வாங்கி வந்துள்ளார். அறுவை சிகிச்சைக்காக வீட்டில் தான் சேமித்து வைத்திருந்த இரண்டு லட்ச ரூபாயை எடுத்து பார்க்கும் போது அந்த முதியவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

4 வருடங்களாக தான் மிச்சப்படுத்தி வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களை எலிகள் கடித்து குதறி வைத்து இருந்தது. இதைபார்த்த முதியவர் கடுமையான மன உளைச்சலுக்குள்ளானார்.

அதன்பின் வங்கியில் இந்த நோட்டுக்களை மாற்ற முயற்சித்துள்ளார் ரெட்டியா. ஆனால் அங்கேயும் கந்தலான ரூபாய் நோட்டுக்களை வாங்க வங்கி ஊழியர்கள் மறுத்துவிட்டனர். மேலும், அங்கிருந்த சிலர் ஹைதராபாத்தில் உள்ள RBI வங்கிக்கு சென்றால், கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என கூறியுள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள RBI வங்கியில் மாற்றுவார்களா? இல்லையா? என கேள்விக்குறியாய் நிற்கிறார் ரெட்டியா.

இந்த  சம்பவம் அப்பகுதி மக்களையும், ரெட்டியாவின் குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்