'1000 ரூபாயில் கொரோனா தடுப்பூசி...' இந்தியாவில் எப்போது அறிமுகம்...? - அனைவரின் 'நெஞ்சை குளிர்விக்கும்' வகையில் வெளியான புதிய தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாகும் கொரோனா தடுப்பூசி வரும் நவம்பர் முதல் ரூபாய் 1000 ரூபாய்க்கு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நம்பிக்கை தெரிவிக்கிறது சீரம் இன்ஸ்டியூட்.

கடந்த வருடம் 2019 டிசம்பர் மாதம் முதல் உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் பல நாடுகளின் பொருளாதாரத்தையும்  மக்களின் வாழ்வாதாரத்தையும் அடித்து துவம்சம் செய்துள்ளது. பல லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியுள்ளது, இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன, சில நாடுகள் மனிதர்களுக்கு செலுத்தி தங்களின் பரிசோதனையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்து அரசு, மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் இந்த தடுப்பூசியினை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த தடுப்பு மருந்தானது பல கட்ட சோதனைகளுக்கு பிறகு இங்கிலாந்தில் மனிதர்களுக்கும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது இங்கிலாந்து அரசு. இந்த அறிவிப்பானது உலக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி 'டோஸ்' வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. மேலும் வரும் நவம்பர் மாதத்திற்குள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி ரூ.1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா இதுகுறித்து கூறும்போது, 'சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூச்சியின் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும் மேலும் ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் சுமார் 6 கோடி டோஸ்களில் இந்தியாவுக்கு 3 கோடி டோஸ்கள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் மருத்துவ பரிசோதனைகள் நல்ல பலன்களைப் பெறாவிட்டால், முழு பங்கும் போகும் அபாயங்கள் உள்ளன. ஆகஸ்டில் இந்தியாவில் 3 ஆம் கட்ட சோதனைகளுக்குச் செல்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது முடிவடைய இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கணித்துள்ளோம். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று சொன்னால் உற்பத்தியை தொடங்குவோம். மேலும் நவம்பர் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்' எனக்கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்