கொரோனா எதிரொலி!.. வேப்பமரத்தடியில் சட்டமன்ற கூட்டம்!.. புதுச்சேரியில் எம்.எல்.ஏ-க்கள் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கூட்டத் தொடர் வேப்பமரத்தடியில் நடைபெற்றது.

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் 20 ம் தேதி துவங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய அன்று, 2020-21 ம் ஆண்டிற்கு 9000 கோடி ரூபாய்க்கான நிதி நிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது உரையை நிகழ்த்தினார். இதில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சட்டமன்ற மைய மண்டபம் கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டது.

இதனால் சட்டமன்ற நுழைவு வாயிலில் வெப்பமரத்தடியில் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் சட்டமன்றம் கூடியது. இதற்காக மரத்தடியில் தற்காலிக பந்தல் போட்டு நாற்காலி-மேஜைகள் போடப்பட்டு மைக் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. என்.ஆர்.காங் எம்எல்ஏக்கள் யாரும் வரவில்லை. காங்கிரஸ், அதிமுக, திமுக உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

சபை துவங்கியதும் பட்ஜெட் உரை மீது உறுப்பினர்கள் சுருக்கமாக பேச சபாநாயகர் சிவக்கொழுந்து கூறினார். உடனே முதல்வர் நாராயணசாமி எழுந்து, மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த வேண்டி இருப்பதால் பட்ஜெட்டை நிறைவேற்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க கேட்டு கொண்டார். அதிமுக எம்எல்ஏ அன்பழகன் எழுந்து, சட்டமன்ற கூட்டத்திற்கு முன்பே உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தினோம்.


ஆனால் அரசு அலட்சியத்தால் ஆளுநர், அரசு செயலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர் என்றார். யாருக்குமே பாதுகாப்பு இல்லை. இந்த அரசை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் தரையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது முதல்வர் நாராயணசாமி எழுந்து, ஒரு உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மற்றவர்களும் கொரோனா சோதனை மேற்கொள்ள சுகாதார துறை அதிகாரிகளை கேட்டதற்கு, 5 நாட்கள் கழித்து பரிசோதனை எடுத்தால் தான்தெரியும் என கூறியதால்  திங்கட்கிழமை சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அனைவரையும் இந்த அரசு பாதுகாக்கும் என உறுதியளித்தார். இதனையடுத்து திமுக உறுப்பினர் சிவா எழுந்து, அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டு மிக முக்கியமாக கொரோனா காரணமாக முடங்கியுள்ள மக்களுக்கு உதவிட அனைத்து  குடும்பத்திற்கும் ரூ.5000, 30 கிலோ அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து உறுப்பினர்களின் விவாதம் இன்றி அவர்களது கருத்துக்கள் எழுத்துபூர்வமாக கொடுக்க கூறி துறைகளுக்கு நிதி ஒதுக்கும் மானிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்