Breaking: இந்தியாவின் புதிய ஜனாதிபதி ஆகிறார் திரௌபதி முர்மு.. கவுன்சிலர் டூ ஜனாதிபதி.. முர்மு கடந்துவந்த பாதை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத வாக்கினை பெற்றிருக்கிறார் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்மு.
குடியரசு தலைவர் தேர்தல்
இந்தியாவின் தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்திருந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு தேர்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை தேர்ந்தெடுத்தனர். இதனிடையே கடந்த 18 ஆம் தேதி குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
முன்னிலை
இந்நிலையில், இன்று குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு ஆரம்பம் முதலே முன்னிலை வகித்தார். இந்நிலையில், 50 சதவீத வாக்குகளை அவர் பெற்றுவிட்டதால் அவருடைய வெற்றி உறுதியாகியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடி இனத்தை சேர்ந்த ஜனாதிபதியாக இருக்கிறார் அவர். வரும் 25 ஆம் தேதி அவர் இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
திரௌபதி முர்மு
ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு பிறந்த திரௌபதி முர்மு பழங்குடி இனத்தை சேர்ந்தவராவார். ஒருவேளை இந்த தேர்தலில் திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும். தற்போது 64 வயதான முர்மு ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து ஆசிரியராகவும் பணியாற்றிவந்த முர்மு, பின்னர் அரசியல் கால்பதித்தார். தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், படிப்படியாக சட்ட மன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
அமைச்சர்
இருமுறை சட்டமன்ற உறுப்பிரான முர்முய ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார். பின்னர், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும் இவர் பணியாற்றினார்.
இந்நிலையில், குடியரசு தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து அரசியல் தலைவர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்