கிரிக்கெட் உலகின் முதல் தமிழ் வர்ணனையாளர்... ‘சாத்தான்குளம்’ அப்துல் ஜப்பார் காலமானார்!.. “அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளர்” - கமல்ஹாசன் அஞ்சலி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளராக பார்க்கப்படும் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் தன்னுடைய 81வது வயதில் உடல்நலக்குறைவால் என்று காலமாகியுள்ளார்.

1980 களில் தொடங்கி கிரிக்கெட் போட்டிகளுக்கான தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் ஜப்பார் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தமிழகம் - கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டியை தான் முதன்முதலில் தமிழில் வர்ணனை செய்ய தொடங்கினார். 1982ஆம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியையும் தமிழில் வர்ணனை செய்த அப்துல் ஜப்பாரை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.

1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக ஐபிசி தமிழ் வானொலிக்காக பணி ஆற்றிய இவர், 2004 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்தார். இவர் 2007 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ESPN STAR Cricket தொலைக்காட்சிக்காக தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்தார்.

இப்படி இதுவரை மொத்தம் 35 கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஹாக்கி போட்டிகளில் வர்ணனையாளராக செயல்பட்டு சிறப்பான உலகத்தமிழர் என நன்மதிப்பைப் பெற்ற அப்துல் ஜப்பாருக்கு ரசிகர்கள் ஏராளமானோர். இவருடைய வர்ணனை காரணமாகவே தமிழிலிருந்து கிரிக்கெட் போட்டியை காண தொடங்கியவர்கள் அதிகம் என்று சொல்லலாம்.

அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனையை நேசித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சமாதான காலத்தில் அப்துல் ஜப்பாரை தம் இடத்துக்கு அழைத்து விருந்தளித்தது பற்றி ‘அழைத்தார் பிரபாகரன்’ என்னும் புத்தகத்தில் தமிழீழ பயணம், பிரபாகரன் சந்திப்பு உள்ளிட்டவை பற்றி அப்துல் ஜப்பார் எழுதியிருக்கிறார்.

இப்படி பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையான அப்துல் ஜப்பார் இன்று காலை மாரடைப்பால் மறைந்தார். இவருடைய மறைவு தமிழ் சமூகத்துக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகில் ஒரு நல்ல வர்ணனையாளருக்கான இழப்பாகவும் இவருடைய வெற்றிடம் பார்க்கப்படுகிறது.

இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், “வானொலியில் விளையாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவரும், உலகத் தமிழரிடையே அன்றாடம் அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளருமான  சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைந்தார். அஞ்சலி.” என்று நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்