“அவர் ஒன்னும் ராமராஜனோ.. 'மைக்' மோகனோ கிடையாது!” - சமூக வலைதள விவாதத்தில் வந்த விமர்சனங்கள்.. ‘பிரபல இயக்குநர் கொடுத்த’ பதிலடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த நிலையில் அதனை வரவேற்று  'நேரம்', 'பிரேமம்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அத்துடன், தனது பதிவில் ரஜினிகாந்தை விமர்சனம் செய்தவர்களுக்கும்  பதிலடி கொடுத்தார்.

ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31-ம்தேதி அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் ரஜினி தெரிவித்துள்ள நிலையில், ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள அல்போன்ஸ் புத்திரன், "ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான் அவரின் அரசியல் வருகைக்கு வாழ்த்துக்கள். " என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்தப் பதிவுக்குப் பலரும் வரவேற்பும்,  ரஜினிகாந்தை விமர்சித்து கருத்தும் பதிவிட்ட நிலையில்,  அல்போன்ஸ் புத்திரன் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதிலளித்துள்ளார்.

அதில், "மம்முட்டியும், மோகன்லாலும் அரசியலுக்கு வந்தால் இப்படி ஆதரிப்பீர்களா" என்ற கேள்விக்கு, "ஏன் ஆதரிக்கக் கூடாது?" என்று பதில் அளித்தார். இதேபோல், "ரஜினி தமிழர்களின் பிரச்சினைக்கும் குரல் கொடுத்தது கிடையாது, இன்னும் எவ்வளவு நாட்கள் மக்களை ஏமாற்றுவார்கள்" என்று பயனர் ஒருவரின் தொடர் கருத்துப் பதிவுக்கு, அல்போன்ஸ் புத்திரனின் பதில்கள் வைரலாகியுள்ளன.

அதன்படி, “திரைப்படங்கள் உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கதைகள் திரைப்படமாகும் போது அவை உண்மையாகின்றன அல்லவா?, அவர் ராமராஜனோ, மைக் மோகனோ அல்ல. அவர் ரஜினிகாந்த். மக்களுக்கு பொழுதுபோக்கினை அளிக்க கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவசியம். அவரது வெற்றி படங்களைப் பார்த்தால் இந்த உலகத்திலேயே எந்த நடிகரும் அதுபோல இல்லை. நடிப்பது சாதாரண காரியமல்ல. கடினமானது.

அரசியலுக்குள் நுழையும்போதும் இதே அளவு உழைப்பு, அர்ப்பணிப்பை அவர் தருவார் என நினைக்கிறேன். அவர் முதல்வராக நினைத்தால் அவர் முதல்வராவார். அது என் நம்பிக்கை. அவ்வளவே. மற்றபடி முழு நேர அரசியலுக்கு வந்தபிறகு அவரை, முன்னாள் எம்.பி.க்களுடன் நான் ஒப்பிட்டுக் கொள்கிறேன். மக்களைப் பற்றி அக்கறை இருந்தால் நீங்கள் (பதிவரைப் பார்த்து) அரசியலுக்கு வாருங்கள். நீங்கள் பார்த்த தலைவர்களோடு ரஜினிகாந்தை ஒப்பிட வேண்டியதில்லை” என்று அல்போன்ஸ் புத்திரன் பதில் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்