‘இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் நிலை என்ன?’... ‘பிரதமர் தலைமையில் ஆய்வு’... ‘வெளியான முக்கிய தகவல்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், தடுப்பு மருந்து தயாரிப்பு நிலை பற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையிலான பணிக்குழுவினருடன் பிரதமர் ஆய்வில் ஈடுபட்டார்.

அதில், இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு, மருந்து கண்டுபிடிப்பு, பரிசோதனை மற்றும் நோய் கண்டறிதல் பற்றி மருத்துவ விஞ்ஞானிகளுடன், பிரதமர் மோடி விரிவாக ஆலோசித்துள்ளார். இந்த கூட்டத்திற்கு பின்னர் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸூக்கு எதிராக 30-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் வெவ்வேறு கட்டங்களில் வளர்ச்சி நிலையிலும், சோதனையிலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஆய்வுகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளன. விரைவில் இந்த மருந்துகள் மனிதர்களுக்கு பரிசோதிக்கப்பட உள்ளன. தடுப்பு மருந்து தயாரிப்புக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்களை ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு தீர்க்கிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பில் கணினி அறிவியல், வேதியியல் மற்றும் பயோ டெக்னாலஜி ஆகியவை விஞ்ஞான ரீதியாக ஒன்றிணைந்ததை பிரதமர் பாராட்டினார்' என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஆராய்ச்சி செய்து வரும் வேளையில், மனித பரிசோதனைக்கு எட்டு தடுப்பூசிகள் தயாராகி உள்ளன என்றும், மேலும் 100 மருந்துகள் கொரோனா வைரஸுக்கு நிரந்தர சிகிச்சையை கண்டுபிடிப்பதற்கான முன்கூட்டிய மதிப்பீட்டில் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்