'அந்த' சிகிச்சையை பயன்படுத்தாதீங்க... 'சட்ட' விரோதமான செயல்: மத்திய அரசு எச்சரிக்கை

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் பரவிவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பலவும் பிளாஸ்மா சிகிச்சை முறையை கையில் எடுக்க ஆரம்பித்து இருக்கின்றன. ஏற்கனவே தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் பிளாஸ்மாவை பெற்று, அதனை தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சை முறையாகும்.

குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் இருக்கும் இம்யூனோ குளோபின்கள், தொற்றுநோய் வைரஸ்க்கு எதிராக போராடி வெற்றி பெற்று பலமடைந்திருக்கும். அதனை, சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும்போது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து குணம் அடைய வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ், மெர்ஸ் வைரஸ் தாக்கத்தின் போதும், எபோலா தொற்றின் போதும் இந்த பழைய முறை சோதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை முறையை அமல்படுத்த சோதனை பணிகள் நடக்கிறது.

இந்த நிலையில் ஒப்புதல் இல்லாமல் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது சட்ட விரோதமான செயல் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லால் அகர்வால் கூறுகையில், ''பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது, இருப்பினும் இது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதன் செயல்திறனை ஆய்வு செய்ய ஐ.சி.எம்.ஆர் தொடங்கிய தேசிய அளவிலான ஆய்வு நடக்கிறது.

ஐ.சி.எம்.ஆர் தனது ஆய்வை முடிக்கும் வரை  ஒரு வலுவான அறிவியல் சான்று கிடைக்கும் வரை, பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சி அல்லது சோதனை நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சரியான வழிகாட்டுதலின் கீழ் பிளாஸ்மா சிகிச்சையை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தான சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும்.

பிளாஸ்மா சிகிச்சை என்பது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை அல்ல. இது இன்னும் சோதனை நிலையில் உள்ளது, இப்போது ஐ.சி.எம்.ஆர் கூட இந்த சிகிச்சையைப் பற்றிய கூடுதல் புரிதலை அடையாளம் காணவும் செய்யவும் ஒரு பரிசோதனையாகச் செய்து வருகிறது. இது அங்கீகரிக்கப்படும் வரை யாரும் அதைப் பயன்படுத்தக்கூடாது, இது நோயாளிக்கும் தீங்கு விளைவிக்கும் மேலும் சட்டவிரோதமாகும்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்