'மாட்டு பால் வேண்டாமே'... 'பீட்டா கிளப்பிய சர்ச்சை'... 'என்னது, இந்த பாலை நாங்க குடிக்கணுமா'?... 'கொந்தளித்த நெட்டிசன்கள்'... அமுல் கொடுத்த நெத்தியடி பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீட்டாவுக்கும் சர்ச்சைகளுக்கும் வெகு தூரம் இல்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் மீண்டும் ஒரு கருத்தைக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளது பீட்டா.

விலங்குகள் நல உரிமை அமைப்பான ‘பீட்டா’ அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள நார்போல்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இறைச்சிக்காகவும், தோல் ஆடைகளுக்காகவும், ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்வதற்கும், சர்க்கஸ் போன்ற பொழுது போக்குகளுக்காகவும் விலங்குகள் பயன்படுத்துவதை எதிர்த்து வருகிறது. விலங்குகளைச் சித்ரவதை செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்று கூறி அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் மற்றும் மெரினாவில் நடைபெற்ற போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றதது. இதனால் மக்கள் பேராதரவு மூலம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதன்காரணமாக பீட்டா கடுமையான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்தித்தது.

இந்த சூழ்நிலையில் மாட்டுப் பாலுக்குப் பதில், சைவ பால் உற்பத்திக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தி அமுல் நிறுவனத்துக்கு ‘பீட்டா’ அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தது. இந்த கருத்து சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அதன்படி, சோயா போன்ற இயற்கை தாவர வித்துகளிலிருந்து பால் தயாரிக்கலாம் என்று கூறியுள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டது அமுல் நிறுவனம். குஜராத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தைப் பின்பற்றிப் பல மாநிலங்கள் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இதன்மூலம் பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவைப் பெற்றுள்ளது. பெரும் பாரம்பரியத்தைப் பெற்ற அமுல் நிறுவனம் பீட்டா நிறுவனத்துக்கு அளித்துள்ள பதில் தற்போது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அதில், ''அமுல் நிறுவனத்தின் மூலம்10 கோடி நிலமற்ற பால் உற்பத்தி விவசாயிகள் வாழ்கின்றனர். அவர்களின் ​​வாழ்வாதாரத்தை பீட்டா வழங்குமா? விவசாயிகள் 10 கோடி பேரில் 70 சதவீதம் பேர் நிலமற்றவர்கள். அவர்களுடைய குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை பீட்டாசெலுத்துமா? அவர்களில் எத்தனை பேர், விலையுயர்ந்த ஆய்வுகள் கொண்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் சைவ உணவைத் தயாரிக்க முடியும்?

அத்துடன் சோயா பாலின் விலை மிகவும் அதிகம். அந்த பால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கட்டுப்படியாகாது. கடந்த 75 ஆண்டுகளாக உருவாக்கியுள்ள விவசாயிகளின் வளங்களைப் பணக்கார வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்து, மரபணு மாற்றப்பட்ட சோயாவை அதிக விலைக்குச் சந்தைப்படுத்த வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது'' என அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பீட்டா அமைப்பின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். அதன்படி இது பீட்டாவின்  மூர்க்கத்தனமான கோரிக்கை என்றும், இந்தியாவிடம் பீட்டா கூறுவதைப் போல் அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளிடமும் பால் பண்ணைகளை ஒழிக்கவும், இறைச்சி உற்பத்தியை நிறுத்துங்கள் எனக் கூற முடியுமா எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்