‘ஒரு காலத்துல கொடிகட்டி பறந்த கம்பெனி’!.. வாசலில் ஒட்டப்பட்ட ‘நோட்டீஸ்’.. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுகழ்பெற்ற சைக்கிள் நிறுவனமான அட்லஸ் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஹெர்குலஸ், அட்லஸ் சைக்கிள் நிறுவனங்கள் ஒருகாலத்தில் பிரபலமானவையாக இருந்தன. ஹரியானவின் சோனிபேட் என்ற இடத்தில் கடந்த 1951ம் ஆண்டு அட்லஸ் நிறுவனம் தனது முதல் தொழிற்சாலையை தொடங்கியது. 1965-ல் இந்தியாவின் பிரபலமான சைக்கிள் உற்பத்தி நிறுவனமாக வளர்ந்தது. 90 கிட்ஸ்களின் வாழ்க்கையில் அட்லஸ் சைக்கிள் ஒரு அங்கமாக விளங்கியது. ஆனால் காலப்போக்கில் பைக்குகளில் வருகையால், சைக்கிள் வாங்குவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
இதனால் கடந்த 2014ம் ஆண்டு மலன்பூரில் உள்ள தொழிற்சாலையும், 2018-ல் சோனிபேட்டில் உள்ள தொழிற்சாலையும் மூடப்பட்டது. இந்த நிலையில் ஹரியானா மாநிலம் ஷாகிபாபாத்தில் இயங்கி வந்த கடைசி தொழிற்சாலையும், உலக சைக்கிள் தினமான கடந்த 3ம் தேதி மூடப்பட்டது. வழக்கம்போல வேலைக்கு வந்த ஊழியர்களுக்கு தொழிற்சாலையின் வெளியே ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதில் நிதி நெருக்கடி காரணமாக தொழிற்சாலை மூடப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நீண்ட நாள்களாக வேலையில்லாமல் அவதிப்பட்ட ஊழியர்களுக்கு, எந்த முன் அறிவிப்பும் இன்றி ஆலை மூடப்பட்ட சம்பவம் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தங்களது வாழ்வாதாரத்திற்கு நிறுவனம் உதவி செய்ய வேண்டுமென ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த தொழிலாளர்கள் சங்க பொதுசெயலாளர் மகேஷ் குமார்,‘நிறுவனத்தின் முடிவை எதிர்த்து தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் தரப்பு வாதங்களை உறுதி செய்வதற்காக சம்மன் அனுப்பட்டுள்ளது. உலக சைக்கிள் தினத்தன்று மூடப்பட்ட அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தால் சுமார் 1,000 ஊழியர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்