‘தொடரும் பதைபதைக்க வைக்கும் கொடூரங்கள்..’ இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டான #NoToJaiShriRam..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் வன்முறைகளைத் தொடர்ந்து NoToJaiShriRam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ஜெய்ஸ்ரீராம் எனச் சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தி நிகழும் வன்முறைகள் நாடு முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கடந்த மே மாதம் 25ஆம் தேதி டெல்லி அருகே மசூதிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த முகமது பரக்கத் என்னும் இளைஞரை ஜெய் ஸ்ரீராம் எனக் கோஷமிடச் சொல்லி ஒரு கும்பல் தாக்கியுள்ளது. குல்லாவைப் பறித்து குர்த்தாவையும் கிழித்து வன்முறையில் ஈடுபட்ட அந்தக் கும்பலிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்துள்ளார் முகமது.

இதேபோல மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் ரயிலில் வந்துகொண்டிருந்த ஹஃபீஸ் முகமது ஷாரூக் என்பவரையும் ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் என ஒரு கும்பல் தாக்கியுள்ளது. ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட மறுத்த அவரைக் கடுமையாகத் தாக்கி ஓடும் ரயிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளது அந்தக் கும்பல். இதில் அதிர்ஷ்டவசமாக ஹஃபீஸ் உயிர் பிழைத்துள்ளார்.

மேலும் கடந்த 18ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் திருடன் எனக் கருதி அன்சாரி என்ற 24 வயது இளைஞரைத் தாக்கியுள்ளது ஒரு கும்பல். ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என சொல்லச் சொல்லி அவர்கள் சுமார் 7 மணி நேரமாக அன்சாரியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டதிலிருந்து 18 மணிநேரம் கழித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 24ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

கடவுளின் பெயரால் நிகழும் இந்தக் கொடூரமான வன்முறைகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவங்களுக்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து NoToJaiShriRam என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்திலுள்ளது.

NOTOJAISRIRAM

மற்ற செய்திகள்