'மின் கம்பத்தில் டிராக்டர் மோதி'... 'நொடியில் நடந்த கோரம்'... '6 பெண்கள் உள்பட 9 பேர் பலி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் மின்கம்பத்தில் டிராக்டர் மோதியதால் மின்சாரம் தாக்கி பெண்கள் உட்பட 9 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மாச்சவரம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஓங்கோலில் உள்ள மிளகாய் மண்டியில்  வேலை செய்து வந்தனர். நேற்று மாலை வேலை முடிந்து 30 தொழிலாளர்கள் டிராக்டரில்  ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ராப்ர்லா  அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதனால்,  மின்கம்பம் முறிந்து  டிராக்டர் மீது விழுந்தது. அதில் இருந்து மின்சாரம் பாய்ந்து, டிராக்டரில் இருந்த 6 பெண்கள் உட்பட 9 பேர் துடிதுடித்து கருகி இறந்தனர்.

மேலும், சிலர் மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டனர். டிராக்டர் மின் கம்பத்தில் மோதிய வேகத்தில் பலர் கீழே வந்ததால் சிறிய காயங்களுடன்  உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும், ஓங்கோல்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே டிராக்டர் விபத்தில் 9 உயிரிழந்தது குறித்து அறிந்த ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்