“உங்களால பீஸ் கட்ட முடியலனா.. நாங்களே ஐடியா தர்றோம்!”.. 'மகப்பேறு' சிகிச்சைக்கு பின் 'மருத்துவமனை' போட்ட 'டீல்!'... பெற்றோர்கள் செய்த 'அதிர்ச்சி' காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகப்பேறு சிகிச்சைக்கான தொகையை கட்ட முடியாத காரணத்தால் பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை பெற்றோரிடம், சிகிச்சை பார்த்த மருத்துவமனையே விலைபேசி குழந்தையை பெற்றுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரில் சைக்கிள் ரிக்ஷா இழுத்துவரும் சிவ் சரண் என்பவர் தனது கர்ப்பிணி மனைவியை சில நாட்களுக்கு முன்பாக அங்குள்ள தனியார் மருத்துமனையில் பிரசவத்திற்காக சேர்த்திருந்தார். அவரது மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் அவரது மனைவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அவரிடம் 35 ஆயிரம் ரூபாய் சிகிச்சை கட்டணமாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது. அந்த தொகையை செலுத்த முடியாத சிவ்சரணிடம் குழந்தையை தங்களிடம் 1 லட்சம் ரூபாய்க்கு விற்று விடுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி குழந்தையை மருத்துவமனை நிர்வாகத்திடம் விற்றதுடன், மருத்துவ சிகிச்சைக்கான செலவு போக மீதம் 65 ஆயிரம் ரூபாயை, குழந்தையின் பெற்றோர் பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சோதனை நடத்தி மருத்துவமனையின் உரிமம் ஐந்து ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை என்பதையும் கண்டறிந்து அந்த மருத்துவமனையை சீல் வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மூத்த சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையின் பெற்றோர் அளித்த வாக்குமூலத்தையும் சேகரித்த அதிகாரிகள், குழந்தை கடத்தல் பிரிவின் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய சிவ் சரண், ஆஷா சமூக நலப் பணியாளர்கள் தன் மனைவியை பரிசோதிக்காததால்தான் தனியார் மருத்துவமனையில் தன் மனைவியை சேர்த்ததாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்