மறுபடியும் அதே ‘டிசம்பர்’!.. பரவும் ‘புதிய’ வகை கொரோனா.. டிரெண்டாகும் #CoronavirusStrain ஹேஷ்டேக்.. என்ன காரணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் #CoronavirusStrain என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டு ஆன நிலையில், தற்போதுதான் அதன் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. மேலும் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட  நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இங்கிலாந்தில் பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறிப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த புதிய வைரஸ் தற்போதுள்ள வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவக் கூடியது என கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களும் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, உள்ளிட்ட பல நாடுகள் இங்கிலாந்து உடனான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இந்தநிலையில், இங்கிலாந்தில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது சளி மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி அமலுக்கு வந்ததால் கொரோனா பீதி சற்று தணிந்திருந்த நிலையில், பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை வைரஸ் மீண்டும் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்த நிலையில் இந்த ஆண்டும் டிசம்பர் மாதம் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் #CoronavirusStrain என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்