'என்னங்க உங்க நியாய தர்மம்'?...'Zomato ஊழியரை செருப்பால அடிக்கலாமா'?... 'Men Too' ஆரம்பித்து கொந்தளித்த நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநேற்று முதல் இணையத்தால் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம், சொமாட்டோ ஊழியருக்கும், வாடிக்கையாளருக்கு நடந்த பிரச்சனை குறித்துத் தான்.
பெங்களூரைச் சேர்ந்த ஹிட்டேஷா சந்திரனே என்பவர் அழகுக் கலை நிபுணராகவும், மாடலாகவும் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சொமாட்டோ செயலி மூலம் மாலை 3.30 மணியளவில் உணவை ஆடர் செய்துள்ளார். ஆடர் செய்த உணவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வந்தடையாததால், வாடிக்கையாளர் சேவை மையத்திற்குப் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நேரத்தில் உணவை டெலிவரி செய்யும் ஊழியர் அவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆடர் செய்த உணவைக் காலதாமதமாகக் கொண்டு வந்தது தொடர்பாக, ஹிட்டேஷா சந்திரனேவுக்கும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி சொமாட்டோ ஊழியர் தனது வீட்டிற்குள் வர முயன்றதாகவும், ஒரு கட்டத்தில் அந்த நபர் தனது மூக்கை உடைத்ததாகவும் ஹிட்டேஷா வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்துப் பேசிய இது குறித்துத் தெரிவித்த சொமாட்டோ டெலிவரி ஊழியர் காமராஜ், ''ஹிட்டேஷா என்னைச் செருப்பால் தாக்க முயன்றார். நான் தற்காப்புக்காகத் தடுத்தேன். அவர் கதவில் மோதி காயமடைந்தார்'' எனத் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்டுள்ள சொமாட்டோ இது குறித்து போலீசார் உதவியுடன் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போல எதிர்காலத்தில் நடக்காது எனவும் உறுதி அளித்துள்ளது. அதே நேரத்தில் சம்மந்தப்பட்ட நபரை பணிநீக்கம் செய்துவிட்டதாக சொமாட்டோ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் ட்விட்டரில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண், இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதால் அவர் கூறியதை மட்டும் எடுத்து கொண்டு பலரும் சொமாட்டோ டெலிவரி ஊழியரின் தரப்பு நியாயத்தை யாரும் பேசவில்லை என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சொமாட்டோ டெலிவரி ஊழியர் காமராஜ், அந்த பெண் என்னைச் செருப்பால் அடிக்க வந்தார், நான் அதைத் தடுத்தேன் அப்போது அவர் கதவில் மோதி அந்த பெண்ணுக்குக் காயம் ஏற்பட்டது எனக் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து யாரும் பேசவில்லை எனக் கொந்தளித்துள்ளார்கள். அதே நேரத்தில் அந்த பெண்ணின் முதலை கண்ணீரைப் பார்த்து விட்டு பலரும் அந்த பெண்ணுக்காக மட்டுமே பேசுவதாகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.
இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் Men Too மொமெண்ட் ஆரம்பித்து அதில் சொமாட்டோ டெலிவரி ஊழியர் காமராஜுக்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். தான் ஒரு பிரபலம் என்பதால் தான் என்ன சொன்னாலும் நம்பி விடுவார்கள் என நினைப்பது வெட்கக்கேடானது என நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்