‘கழுத்து நிறைய மெடல்’!.. 2 தடவை தேசிய அளவில் தங்கப்பதக்கம்.. வாழ்க்கையை புரட்டிப்போட்ட வறுமை.. வில்வித்தை வீராங்கனையின் பரிதாப நிலை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வில்வித்தையில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை குடும்ப வறுமை காரணமாக பக்கோடா விற்று வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரானா ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் தொழில்கள் முடக்கம் ஏற்பட்டு பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் பலரும் தங்களது வேலை இழந்தனர். ஏற்கனவே செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில், வில்வித்தையில் தேசிய அளவில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர் குடும்ப வறுமை காரணமாக சாலையோரத்தில் பக்கோடா விற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரை அடுத்த தாமோதர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வித்தை வீராங்கனை மம்தா துட்டு (Mamta Tuddu). கடந்த 2010-ம் ஆண்டு ஜூனியர் மற்றும் 2014-ம் ஆண்டு சப் ஜூனியர் பிரிவுகளில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் மம்தா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவருடைய தந்தை பிசிசிஎல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ராஞ்சி வில்வித்தை பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த மம்தா, கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது, போதுமான வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. தனக்கு உடன் பிறந்த 7 பேருக்கும் மூத்த சகோதரியாக மம்தா இருப்பதால், குடும்ப பாரம் அனைத்தும் அவரது தலையில் இறங்கியுள்ளது. இதனால், விளையாட்டு பயிற்சியை விட்டுவிட்டு 23 வயதில் தன் குடும்பத்துக்காக சாலையோரமாக பக்கோடா கடை ஒன்றை அமைத்து, அதில் வரும் வருவாயை வைத்து குடும்பத்தை வழிநடத்தி வருகிறார்.

மம்தாவின் நிலை ஊடகங்களின் வழியாக வெளியானதையடுத்து தன்பாத் வில்வித்தை நிர்வாகம் அவருக்கு போதுமான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளது. வில்வித்தையில் வாங்கிய பதக்கங்களை வீட்டில் குவித்து வைத்துள்ள மம்தா, அரசிடமிருந்து முழுமையான உதவி கிடைத்தால் மட்டுமே தன்னுடைய வில்வித்தை பயிற்சியை தொடர முடியும் என வேதனை தெரிவித்துள்ளார்.

2009 முதல் 2011-ம் ஆண்டு வரை மம்தாவுக்கு பயிற்சியளித்த வில்வித்தை பயிற்சியாளர் முகமது சாம்ஷாத், மம்தா மிகவும் திறமையானவர் என்றும், அவரின் தற்போதைய நிலையைப் பார்த்து மிகுந்த வருத்தமாக இருப்பதாகவும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்