‘தாறுமாறாக’ ஓடிய அரசுப்பேருந்து... ‘மோதிய’ வேகத்தில்... ஆட்டோவுடன் ‘கிணற்றுக்குள்’ தலைகீழாக விழுந்து கோர விபத்து... ‘20 பேர்’ பலியான சோகம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாசிக் அருகே அரசுப்பேருந்தும், ஆட்டோவும் மோதிய வேகத்தில் கிணற்றுக்குள் விழுந்த கோர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துலே மாவட்டத்தில் இருந்து நேற்று நாசிக் மாவட்டத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. மாலை 4 மணியளவில் அந்தப் பேருந்து மாலேகாவ்-தியோலா சாலையில் போய்க்கொண்டிருந்தபோது எதிரே வந்த ஆட்டோவுடன் பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் அந்தப் பேருந்து ஆட்டோவை இழுத்துக்கொண்டு செல்ல, உள்ளிருந்த பயணிகள் பயத்தில் அலறியுள்ளனர்.

இதையடுத்து நொடியில் பேருந்தும், ஆட்டோவும் சாலையோரம் இருந்த கிணற்றின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கிணற்றுக்குள் விழுந்துள்ளன. கிணற்றின் அடியில் ஆட்டோ சிக்கிக்கொள்ள, அதன்மீது பேருந்து தலைகீழாக விழுந்து கிடந்துள்ளது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய பயணிகள் காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். கிணற்றுக்குள் செங்குத்தாக விழுந்து கிடந்த பேருந்தின் பின்புறக் கண்ணாடியை உடைத்து பெரும் சிரமங்களுக்கு இடையில் உள்ளிருந்த பயணிகளை அவர்கள் மீட்டுள்ளனர். பின்னர் இரவே அந்தப் பேருந்து கிணற்றுக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்து மற்றும் ஆட்டோவில் இருந்த 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் காயமடைந்த 15க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திடீரென டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய பேருந்து ஆட்டோ மீது மோதியதாலேயே விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் அரசு சார்பாக நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ACCIDENT, MAHARASHTRA, NASHIK, BUS, AUTO, WELL, CRASH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்