'அவர் தான் என் குல சாமி'... 'யார் அந்த ஹீரோ'... 'இந்தியாவே கொண்டாடும் ஒரே ஒரு நபர்'... மெய்சிலிர்க்க வைத்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை நொடிப் பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வாங்கனி ரயில் நிலையம் உள்ளது. இதில், 2-ம் நடைமேடையில் தாயுடன் குழந்தை ஒரு நடந்து வந்து கொண்டிருந்தது. தாயின் வலதுபுறம் தண்டவாளத்தை ஒட்டி நடந்துவந்த குழந்தை, தன்னையும் அறியாமல் நிலைதடுமாறி உள்ளே தவறி விழுந்தது. அப்போது எதிர்ப் புறத்தில் ரயில் ஒன்று விரைந்து வந்தது.

அப்போது செய்வதறியாமல் தவித்த தாய், தண்டவாளத்துக்கு அருகே முட்டி போட்டு அமர்ந்து குழந்தையைத் தூக்க முயற்சித்தார். ஆனால் குழந்தையால் மேலே வரமுடியவில்லை. ரயில் விரைந்து வந்த நிலையில், எதிர்ப்பக்கத்தில் இருந்து ஓடி வந்த மயூர் ஷெல்கே என்னும் ரயில்வே ஊழியர், குழந்தையைத் தூக்கி மேலே கொடுத்துவிட்டு, அவரும் மேலே ஏறுகிறார். அடுத்த நொடி ரயில் அந்த இடத்தைக் கடக்கிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு (ஏப்.17) மாலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் ரயில்வே நிலையத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. நொடிப் பொழுதில் குழந்தையைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு, இந்திய ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கண்ணிமைக்கும் நொடியில் மயூர் ஷெல்கே, குழந்தையை மீட்டுள்ளார். தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து, ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றி உள்ளார். அவரது முன்மாதிரியான தைரியத்திற்கும் தொழில் மீதான பக்திக்கும் தலை வணங்குகிறோம்'' என்று இந்திய ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை உண்மையிலேயே’ தன் உயிரைப் பணயமாக வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல்கேவிற்கு மும்பை கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் அலுவலகர்கள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்திய தருணம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

மற்ற செய்திகள்