'இதுவரை இளசுகளை மட்டுமே கவர்ந்த நெட்வொர்க் நிறுவனம்'... 'இனி கொழந்தைங்களுக்கும் பிடிக்கலாம்'.. ஏன் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாபாரம்பரிய பொம்மை நிறுவனத்தை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 620 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இளைஞர்களை அதிக அளவில் கவர்ந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது குழந்தைகள் உலகத்திலும் கால்தடம் பதித்துள்ளது. உலகின் 259 வருட பாரம்பரிய மற்றும் மிகவும் பிரபலமான பொம்மை ரீடெய்லர் நிறுவனமான ஹாம்லேஸ் இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனி இருந்த போதிலிருந்தே வியாபாரம் செய்து வருகிறது. இப்பேர்பட்ட பெருமையைக் கொண்ட ஹாம்லேஸ் பொம்மை ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின், ரிலையன்ஸ் ரீடெயில் 620 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
லண்டன் ரெகெண்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள ஹாம்லேஸ் பிரத்தியேக ஸ்டோர் ஆண்டுக்கு 30 சதவிகித வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு என சர்வதேச அளவில் 129 கடைகளுடன் ஹாம்லேஸ் இயங்கி வருகிறது. ஹாம்லேஸ்க்கு இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதை அடுத்த 3 ஆண்டுகளில் 200 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். இவற்றின் இந்திய வணிகத்தை ரிலையன்ஸ் தான் கவனித்து வருகிறது.
2018-ம் ஆண்டு இந்திய பொம்மை சந்தையின் மதிப்பு 150 கோடி டாலராக இருந்தது. 2011 முதல் 2018 வரையில் சராசரியாக இந்திய பொம்மை சந்தையின் மதிப்பு 15.9 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. 2024-ம் ஆண்டு இதுவே 303 கோடி டாலராக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே ரிலையன்ஸ் ஹாம்லேஸை வாங்குவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் பொம்மை துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை அடையும் என்று கூறப்படுகிறது.
1760-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹாம்லேஸ், ஐரோப்பிய ஒன்றியங்களில் ஏற்பட்டு வரும் பிரிக்சிட் பிரச்னைகளால் 2017-ம் ஆண்டு 12 மில்லியன் டாலர் நட்டத்தை பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு வருவாய் 2.5 சதவீதம் சரிந்து வருகிறது. ஆனாலும் உலகின் மிகப் பெரிய பொம்மை ரீடெயில் நிறுவனமாக ஹாம்லேஸ் உள்ளது. ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், டீசல், மார்க்ஸ், ஸ்பென்சர்ஸ், ஸ்டீவ் மேட்டன் மற்றும் கென்னெட் கோல் என பல சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
நாடு முழுவதும் ரிலையன்ஸ் ரீடெய்லுக்கு 9,907 கடைகள் உள்ளன. ஹாம்லேஸ் நிறுவனத்தை வாங்கிய பிறகு ரிலையன்ஸ் ரீடெயில் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஹாம்லேஸ் நிறுவனத்தை வாங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக ரிலையன்ஸ் அறிவித்துள்ள நிலையில், பங்குகளின் மதிப்பு இன்று 0.23 சதவீதம் உயர்ந்து 1,258 ரூபாய் என விர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்