‘டெலிகிராமில் இருந்து வந்த மெசேஜ்’!.. திகார் சிறையில் கிடைத்த செல்போன்.. முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார் நின்ற வழக்கில் அதிரடி திருப்பம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் மர்ம கார் நின்ற சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் கடந்த மாதம் 25-ம் தேதி வெடிப்பொருட்களுடன் பச்சை கலர் மர்ம கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தனது கார் திருடப்பட்டதாக இந்த காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தநிலையில் கடந்த 5-ம் தேதி கார் உரிமையாளர் ஹிரேன் மன்சுக் கழிமுகப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் முகேஷ் அம்பானியின் வீட்டின்முன் வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி ஜெய்ஷ்-உல்-இந்த் என்ற அமைப்பு டெலிகிராம் மூலம் பொறுப்பேற்றது.

ஆனால் வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டதற்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தது. முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் சந்தேகமடைந்த போலீசார், செய்தி வந்த டெலிகிராம் கணக்கை ஆராய்ந்தனர். அப்போது அந்த டெலிகிராம் கணக்கு திகாரில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில், திகார் சிறையில் பயங்கரவாத வழக்கில் குற்றவாளிகளாக உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிறை ஒன்றில் இருந்து செல்போனை திகார் சிறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த செல்போனை தடயவியல் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் திகார் சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் விவரங்கள் பெறப்பட்டு விசாரணை தொடரும் என டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்