'காமராஜின் கண்ணீருக்கு பதில் கிடைத்துள்ளது'... 'ட்விட்டரில் தெறிக்க விட்ட நெட்டிசன்கள்'... 'சொமாட்டோ' விவகாரத்தில் அதிரடி திருப்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எந்த ஒரு விவகாரத்திலும் இரண்டு தரப்பையும் தெரிந்து கொண்டு உண்மை எது என்பதை அறிந்து எந்த கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாகப் பெங்களூருவில், சொமாட்டோ டெலிவரியின் போது நடந்த சம்பவம் தான் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. சொமாட்டோ டெலிவரி செய்த இளைஞர் தன்னுடைய மூக்கை உடைத்து விட்டதாகப் பெண் ஒருவர் இன்ஸ்டாவில் வழியும் ரத்தத்துடன் கடந்த வாரம் வீடியோ பதிவிட்டது பரபரப்பை உருவாக்கியது.

இதையடுத்து பலரும் இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தார்கள். சொமாட்டோ நிறுவனமும் டெலிவரி இளைஞர் காமராஜைத் தற்காலிகமாக வேலையை விட்டு நீக்கியது. இந்த சூழ்நிலையில் உணவை ஆர்டர் செய்த ஹிடேஷா சந்திராணி என்ற அந்த பெண் தான் தன்னை செருப்பால் அடிக்க வந்ததாகவும் அதனைத் தடுக்க முயன்றபோதுதான் அவருக்குக் காயம் ஏற்பட்டது என அந்த டெலிவரி இளைஞர் காமராஜ் விளக்கம் அளித்தார்.

பெங்களூருவில் அழகு நிபுணராக பணியாற்றி வரும் ஹிடேஷா, கடந்த மார்ச் 9ம் தேதி சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் உணவு வருவதற்குத் தாமதமானதாகத் தெரிகிறது. இதனால் ஆர்டரை ரத்து செய்யுமாறு சொமாட்டோ கஸ்டமர் கேரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அந்த நேரத்தில் காமராஜ் உணவை டெலிவரி செய்ய வந்துள்ளார். அப்போது காமராஜுக்கும், ஹிடேஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

உடனே உணவை எடுத்துக் கொண்டு செல் என ஹிடேஷா கோபமாகக் கத்தியுள்ளார். அப்போது காமராஜ் அத்துமீறி எனது வீட்டிற்குள் நுழைந்ததாகவும், எனது பாதுகாப்புக்காகச் செருப்பைக் கையில் எடுத்த போது காமராஜ் என்னை முகத்தில் குத்தியதாகவும் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் ஹிடேஷா தெரிவித்திருந்தார். இதற்கிடையே இருதரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்டுள்ள சொமாட்டோ இது குறித்து போலீசார் உதவியுடன் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.

போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள காமராஜை, சொமாட்டோ நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் தனது தரப்பு நியாயத்தைக் கண்ணீருடன் காமராஜ் பதிவு செய்திருந்தார். அதில், ''தாமதமானதால் உணவைத் திரும்ப எடுத்துச் செல்லுமாறு ஹிடேஷா கூறினார், நானும் எடுத்துச் செல்ல தயாராக இருந்தேன். 

ஆனால் என்னை மிகக்கடுமையாகத் திட்டிய அவர், திடீரென என்னைச் செருப்பால் தாக்க முயன்றார். நான் தற்காப்புக்காகத் தடுத்தேன். அவர் அணிந்திருந்த மூக்குத்தி குத்தி இரத்தம் வந்தது. நான் அவரை அடிக்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட ஹிடேஷா வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. பலரும் ஹிடேஷாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

இந்த சூழ்நிலையில் காமராஜ் தரப்பின் ஸ்டேட்மெண்டை புரிந்து கொண்ட பின்னர் தான் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க தொடங்கினர். தற்போது புதிய திருப்பமாகப் பெங்களூரு காவல் நிலையத்தில் டெலிவரி இளைஞர் காமராஜ் அளித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக பாலிவுட் நடிகை பிரனிதி சோப்ரா சொமாட்டோ டெலிவரி பாய் காமராஜுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்