'பத்து பாத்திரம் தேய்த்து வறுமையோடு போராடிய மான்யா'... 'பெத்தவங்களுக்கு இதைவிட வேற என்ன வேணும்'... பலரது இதயங்களை வென்ற வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வறுமையை மட்டுமே பார்த்து வளர்ந்த மான்யா இன்று மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு ரன்னர் அப் வென்று சாதனை படைத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரைச் சேர்ந்தவர் மான்யா சிங்.  பெமினா மிஸ் கிராண்ட் இந்தியா 2020-ஆம் ஆண்டுக்கான அழகி போட்டியில் ரன்னர்-அப் பட்டம் வென்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான மான்யா ஓம்பிரகாஷ் சிங் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. மான்யாவின் தந்தை ஓம்பிரகாஷ் சிங் மும்பையில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வருகிறார். அவரது தாயார் மனோரமா தேவி மும்பையில் ஒரு தையல் கடையை நடத்தி வருகிறார்.

மான்யா சிங் குழந்தைப் பருவத்திலிருந்தே நிதி நெருக்கடியைக் கண்டு வளர்ந்தவர். அவர் பல இரவுகளைப் பட்டினியில் கழித்துள்ளார். பணத்தை மிச்சப்படுத்த அவர் பல கிலோமீட்டர் தூரம் நடந்திருக்கிறார். வறுமை காரணமாகப் பகல் நேரங்களில் பள்ளி சென்று படித்தும், மாலை நேரங்களில் பாத்திரம் தேய்த்தும், இரவு நேரங்களில் கால் சென்டரில் வேலை பார்த்தும் பணம் சம்பாதித்துள்ளார். மகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவரது பெற்றோர் கடுமையாக உழைத்தனர்.

இந்நிலையில் மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு ரன்னர் அப் வென்றபிறகு சொந்த ஊருக்கு வந்த அவர்,  தனது கல்லூரியில் நடைபெற்ற வெற்றிவிழாவிற்கு குடும்பத்தினருடன் ஆட்டோவில் வந்து இறங்கினார். பின்னர் விழா மேடைக்குச் சென்ற அவர் தனது கிரீடத்தைத் தனது தாய்க்கும், தந்தைக்கும் மாறி மாறி வைத்தது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்