‘தங்கையை கொன்று புதரில் வீசிய அண்ணன்’.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் தங்கையை கொன்று புதரில் வீசிய அண்ணனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் முடிப்பு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மகள் ஃபியோனா ஸ்வீடல் (16). இவர் கடந்த 8ம் தேதி காணாமல் போயுள்ளார். சம்பவத்தன்று ஃபியோனாவின் தாய் வேலைக்கு சென்றுவிட்டார். தந்தை பிரான்சிஸ் காலை 11 மணியளவில் கடைக்கு சென்றுள்ளார். வீட்டில் ஃபியோனா மற்றும் அவரது அண்ணன் சாம்சன் மட்டும் இருந்துள்ளனர். தந்தை பிரான்சிஸ் மதிய வேளையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது மகள் ஃபியோனா வீட்டில் இல்லாதது குறித்து சாம்சனிடம் கேட்டுள்ளார். அதற்கு சாம்சன், ஃபியோனா மங்களூரு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். நீண்ட நேரமாக ஃபியோனா வீடு திரும்பாததால், மகளின் செல்போனுக்கு தந்தை பிரான்சிஸ் அழைத்துள்ளார். ஆனால் போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

இதனால் உடனே மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஃபியோனாவின் போன் லொக்கேஷனை சோதித்துப் பார்த்துள்ளனர். அதில் போன் கடைசியாக முடிப்பு பகுதியில் இருந்ததாக காட்டியுள்ளது. இதனை அடுத்து ஃபியோனாவின் அண்ணன் சாம்சனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சாம்சன் சரியாக போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்துள்ளார். அதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் சாம்சனிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்ஜினீயரிங் மாணவரான சாம்சன் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானர் என கூறப்படுகிறது. இதனால் கல்லூரியில் இருந்து பாதியில் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி சாம்சனிடம் இருந்த போனை பிடுங்கி ஃபியோனாவுக்கு அவரின் பெற்றோர் கொடுத்துள்ளனர். இதனால் கடந்த 8ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தங்கையிடம் போனை கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றவே அருகில் இருந்த சுத்தியலால் ஃபியோனாவை அடித்து கொலை செய்துவிட்டு மறைப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள புதரில் வீசியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த கமிஷனர் ஹர்ஷா, ‘இதுபோன்ற காணாமல் போன வழக்குகளில், குடும்ப உறுப்பினர்களிடையே ஒருவித பதற்றம் தெரியும். ஆனால் சாம்சன் எந்தவித பதற்றமும் இல்லாமல் இருந்தார். அதனால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தங்கைக்கு மட்டும் பெற்றோர் அதிக பாசம் காட்டுவதாக சாம்சன் நினைத்துள்ளார். பொறாமையால்தான் தங்கையை சுத்தியலால் அடித்துள்ளார். அதிக ரத்தம் வெளியேறி அப்பெண் உயிரிழந்துள்ளார். கொலைக்குபின்னர் தனக்கு கடுமையான தலைவலி எனக் கூறி இரண்டு நாட்களாக வீட்டில் இல்லாமல் இருந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையில் சாம்சன் கூறிய தகவல்களையும் தெரிவித்துள்ளார். அதில், ‘கல்லூரியில் இருந்து வெளியேறிய பின், என் பெற்றோர் என்னை சரியாக நடத்தவில்லை. எப்போதும் ப்யோனாவுக்கு ஆதரவாக இருந்தார்கள். என்னிடம் அவர்கள் பாசம் காட்டவில்லை. பெற்றோரால் நான் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தேன். காலையில் சாப்பாடுகூட தங்கைக்குதான் முதலில் கொடுத்து வந்தார்கள். அவள் படிப்பில் கெட்டிகாரி. அதனால் அவளுக்கு ஆதரவாகவே இருந்தார்கள். கடைசியாக எனது போனையும் அவளிடம் கொடுத்துவிட்டார்கள். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீட்டில் தனியாக இருந்த தங்கையிடம் வாக்குவாதம் ஏற்பட்டு கொலை செய்துவிட்டேன்’ என விசாரணையில் சாம்சன் தெரிவித்தாக கமிஷனர் ஹர்ஷா தெரிவித்துள்ளார்.

CRIME, BROTHER, KILLED, SISTER, MANGALURU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்