ஓடும் ரயிலில் ‘நண்பன்’ பட பாணியில் பிரசவம்.. கடவுள் மாதிரி வந்த மாற்றுத்திறனாளி.. சினிமாவை விஞ்சிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு மாற்றுத்திறனாளி ஒருவர் நண்பன் பட பாணியில் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்தின் ஜவத்ப்பூருக்கு சம்பர்க்கிராந்தி சிறப்பு ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பரிதாபாத் என்ற இடத்தை ரயில் கடந்தபோது ஒரு பெட்டியின் மிடில் பெர்த்தில் படுத்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் வலியால் துடித்துள்ளார். அந்த பெட்டியில் உதவிக்கு வேறு பெண்கள் யாரும் இல்லாததால் அதே பெட்டியின் அடுத்த பகுதியில் பயணித்த பிரஜாபதி என்ற மாற்றுத்திறனாளி, உதவ வேண்டுமா? என கேட்க, அப்பெண் ‘வேண்டாம்’ என மறுத்துள்ளார்.

அடுத்த சில நிமிடத்தில் மீண்டும் அந்த பெண் வலியால் துடிக்கவும், அது பிரசவ வலிதான் என்பதை லேப் டெக்னீஷியனான பிரஜாபதி உணர்ந்துள்ளார். உடனே தனது மூத்த மருத்துவரான சுபர்ணாசென் என்பவரை வீடியோ காலில் தொடர்புகொண்ட பிரஜாபதி, பிரச்னையை எடுத்துக்கூறி மருத்துவரின் உதவியை நாடியுள்ளார்.

இதனை அடுத்து மன தையிரத்துடன், குளிருக்கு போர்த்தியிருந்த சால்வையில் இருந்து நூல் மற்றும் முகசவரத்திற்கு வைத்திருந்த பிளேடு உதவியுடன் வீடியோ காலில் மருத்துவர் அளித்த அறிவுரைப்படி மாற்றுத்திறனாளியான பிரஜாபதி பிரசவம் பார்த்துள்ளார். பத்திரமாக குழந்தையை தாயிடம் பிரஜாபதி கொடுக்கும்போது சரியாக மதுரா ரயில் நிலையம் வந்துவிட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த ரயில்வே பெண் போலீசார் தாயையும், குழந்தையையும் மதுரா அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண் கிரண் என்பதும் ஏற்கனவே இவருக்கு மூன்று முறை கருக்கலைப்பு ஆனதும் தெரியவந்துள்ளது. மேலும் சகோதரர் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் ரயிலில் அவர் பயணித்துள்ளார்.

அதேபோல் பிரசவம் பார்த்த பிரஜாபதி தனது திருமணத்துக்கு நாள் குறிக்க விடுப்பில் சென்றுகொண்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. ‘நண்பன்’ திரைப்பட பாணியில் உரிய நேரத்தில் சாதூர்யமாக செயல்பட்டு தாயையும், சேயையும் காப்பாற்றிய மாற்றுத்திறனாளி பிரஜாபதிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்