'ஊரடங்கு உத்தரவால்... 200 கி.மீ நடந்தே சென்ற தொழிலாளி!'... வரும் வழியில் நிகழ்ந்த கோரம்... போலீஸார் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கு உத்தரவால் 200 கி.மீ நடந்தே சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து ஆக்ரா நோக்கி 39 வயதான புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் 200 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது, இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட வரும் வழியிலேயே உயிரிழந்தார். இவர் டெல்லியில் உள்ள தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். திருமணம் ஆகி மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இவரைப் பற்றி விசாரிக்கையில், இவரது பெயர் ரன்வீர் சிங் என்று தெரியவந்துள்ளது. இவர், மத்திய பிரதேச மாநிலம் மொரினா அருகே அம்பா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர். நடந்த சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் நடந்து வந்த போது கைலாஷ் மோத் அருகே ரன்வீர் நிலைகுலைந்து விழுந்துள்ளார்.

இதைக் கண்ட அப்பகுதி கடைக்காரர் உதவி செய்ய ஓடி வந்தார். இதுபற்றி சிகந்திரா காவல் நிலைய அதிகாரி அர்விந்த் குமார் கூறுகையில், கடைக்காரர் ரன்வீரை படுக்க வைத்து டீ மற்றும் பிஸ்கட் கொடுத்துள்ளார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக ரன்வீர் சிங் கூறியுள்ளார்.

உடனே தனது உறவினருக்கு போன் செய்து உடல்நிலை பற்றி தெரிவித்துள்ளார். மாலை 6.30 மணியளவில் ரன்வீர் உயிரிழந்ததாக குறிப்பிட்டார். மேலும், பிரேத பரிசோதனையில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

நீண்ட தூரம் நடந்து வந்ததால் இதயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்த பேசிய சிகந்திரா காவல் நிலைய அதிகாரி, தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் உத்தரப் பிரதேச போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் தங்களிடம் உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அவ்வழியே வரும் பயணிகளுக்கு அளித்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் ரன்வீரின் இறப்பு எதிர்பாராத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் இளைய சகோதரர் சோனு சிங் கூறுகையில், டெல்லி துக்ளகாபாத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரன்வீர் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உட்பட 3 பிள்ளைகள் இருக்கின்றனர். நாங்கள் ஏழை விவசாயிகள். அவரின் குழந்தைகளை எப்படி கரை சேர்ப்பது என்று தெரியவில்லை என்று வேதனைப்பட்டார்.

 

CORONA, CORONAVIRUS, DELHI, LABOUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்