‘இது திட்டமிட்ட சதி’!.. அடையாளம் தெரியாத நபர்களால் ‘தாக்கப்பட்ட’ மம்தா பானர்ஜி?.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேர்தல் பரப்புரையின்போது அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கீழே தள்ளிவிடப்பட்டு காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அம்மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று நந்திகிராம் தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதன்பின்னர் பிருலியா என்ற இடத்தில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, தனது கார் அருகில் மம்தா நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த ஐந்து பேர், திறந்த நிலையில் இருந்த மம்தா காரின் முன்பக்க கதவை தள்ளியதில் அவரது காலில் பலமாக அடிபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த மம்தா பானர்ஜி, தன்னை வேண்டுமென்றே அவர்கள் தள்ளிவிட்டதாகவும், இது திட்டமிட்ட சதி என்றும் குற்றம் சாட்டினார். மேலும், தான் கீழே தள்ளப்படும்போது காவலர்களோ, காவல் கண்காணிப்பாளரோ தனது அருகில் இல்லை என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மம்தாவின் இடதுகாலிலும், இடுப்பிலும் காயம் ஏற்பட்டிருப்பதால், அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதல்வருக்கு சிகிச்சையளிக்க 5 பேர் கொண்ட மூத்த மருத்துவர்கள் குழுவை மேற்கு வங்க அரசு நியமித்துள்ளது.

இந்த தகவலறிந்த அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தாங்கர், உடனடியாக மம்தா பானர்ஜியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மம்தா பானர்ஜியை நலம் விசாரித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தருமாறு தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜியை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அடையாளம் தெரியாத நபர்களால் மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்