'35 ஆயிரம் கோடி முதலீடு, 23 ஆயிரம் பேருக்கு வேலை'... 'முதல்வரின் மாஸ்டர் பிளான்'... எதிர்பார்ப்பில் பட்டதாரி இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா காரணமாகப் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் அடியோடு முடங்கியுள்ளது. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதனால் பல பட்டதாரி இளைஞர்களின் வேலை பறிபோனது. இந்த சூழ்நிலையில் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பல்வேறு மாநில அரசுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் மராட்டிய அரசு, 15 நிறுவனங்கள் இடையே ரூ.35 ஆயிரம் கோடிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், தொழில் தொடங்க முதலீட்டாளர்களை ஈர்க்கவும் மராட்டிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் நேற்று தொழில் முதலீடுகளை ஈர்க்கும் ‘மேக்னடிக் மஹராஸ்டிரா 2.0’ நிகழ்ச்சி நடந்தது. விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய், இணை மந்திரி அதீதி தட்காரே உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் 15 தனியார் நிறுவனங்கள், மாநில தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் இடையே ரூ.34 ஆயிரத்து 850 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த முதலீடுகள் மூலம் மாநிலத்தில் 23 ஆயிரத்து 182 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது படித்த பட்டதாரி இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, ''இந்த ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மாநிலத்துக்கு முதலீடு பெறப்படும். கடந்த ஜூன் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்த 60 சதவீத நிறுவனங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்குவதற்கான இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது.

மராட்டியம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை, நீதி, நிலைத்தன்மையை வழங்கும். மாநில தொழில் துறையின் கடின உழைப்பு மற்றும் அவர்கள் மீது உள்ள நம்பிக்கையால் தான் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. மராட்டியம் இந்த கடின காலத்திலிருந்து பலத்துடன் எழுந்து வரும். அந்த நம்பிக்கை அனைவரிடமும் இருக்க வேண்டும்'' என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்